சத்தீஸ்கர்: 2 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் 2 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் 2 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் கார்டு படைப்பிரிவினர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ராசண்டோங் பகுதியில் முன்னேறிச் சென்றபோது, நக்ஸலைட்டுகள் திடீரென்று சுடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. துப்பாக்கிச் சண்டை நின்ற பிறகு அப்பகுதியில் சீருடை அணிந்த 2 நக்ஸலைட்டுகளின் உடல்களை போலீஸார் கண்டெடுத்தனர். மேலும் அங்கிருந்து 2 துப்பாக்கிகள், 13 டெட்டனேட்டர்கள், ஒரு ரேடியோ பெட்டி, வயர்லெஸ் சாதனம், வயர், சில பேட்டரிகள், மாவோயிஸ்ட் அமைப்பு குறித்த புத்தகங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கண்டெடுத்தனர்.
இந்த மோதலில் பலியான நக்ஸலைட்டுகளின் அடையாளம் தெரியவில்லை என்று தந்தேவாடா மண்டல காவல்துறை ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார். எனினும், அவர்கள் மாவோயிஸ்ட் அமைப்பின் கொல்லபள்ளி உள்ளூர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
3 நக்ஸலைட்டுகள் கைது: இதனிடையே, சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் 3 நக்ஸலைட்டுகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சத்தீஸ்கர் ஆயுதப் படைப்பிரிவும், மாவட்ட காவல்துறையினரும் இணைந்து பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஏக்தா பகுதியில் நக்ஸலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட் அமைப்பின் கீழ்நிலை உறுப்பினர்களான சோமாரு காவ்டே (25), கங்காராம் (39) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில், பிஜாபூர் மாவட்டத்தின் பாகேலா கிராமத்தில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்ஸலைட் தீவிரவாதி போடியம் மாரா (32) என்பவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com