சமூக வலைதளங்களில் வெளிவரும் தவறான தகவல்களை பகிர வேண்டாம்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

'சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.
எஸ்எஸ்பி படைப்பிரிவினர் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சல்யூட் அடித்து வரவேற்கும் அப்படையின் இயக்குநர் அர்ச்சனா ராமசுந்தரம்.
எஸ்எஸ்பி படைப்பிரிவினர் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சல்யூட் அடித்து வரவேற்கும் அப்படையின் இயக்குநர் அர்ச்சனா ராமசுந்தரம்.

'சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. எனவே அவ்வாறு வரும் தகவல்களை ஆராயாமல், வாட்ஸ்-ஆப் போன்ற வலைதளங்களில் பகிர வேண்டாம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள உளவுப் பிரிவை அவர் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இந்தியா-நேபாளம் இடையிலான 1,751 கி.மீ. எல்லையையும், இந்தியா-பூடான் இடையிலான 699 கி.மீ. நீள எல்லையையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இப்படையின் வீரர்களை ராஜ்நாத் சிங் பாராட்டினார். அவர் மேலும் பேசியதாவது:
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான நமது எல்லைப் பகுதி முள்வேலியிடப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல், இந்தியா-நேபாளம், இந்தியா-பூடான் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகள் திறந்தவெளி எல்லைகளாக உள்ளன. விசா இல்லாமல் இருதரப்பு மக்களும் சென்றுவர இந்த எல்லைகள் அனுமதிக்கின்றன. இத்தகைய திறந்த வெளி எல்லைகளைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகும்.
ஒரு திறந்த வெளி எல்லையில், எந்த வழியாக ஒரு குற்றவாளி வருவார் என்பதையோ, யாரெல்லாம் தேசவிரோதி என்பதையோ, கள்ள நோட்டுகள் அல்லது போலி போதைமருந்துகள் ஆகியவற்றைக் கொண்டு வருவது யார் என்பதையோ பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாது.
வீரமரணமடையும் துணை ராணுவப் படை வீரர் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு அளிக்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்துள்ளேன். அதேவேளையில் தற்போது பணியில் இருக்கும், நெருக்கடியான சூழலைச் சந்திக்கும் படை வீரர்களுக்கும் ஏதாவது செய்வது குறித்துப் பரிசீலித்து வருகிறேன். அவர்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன்.
அடிப்படை இல்லாத, தவறான செய்திகளும், தகவல்களும் வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும் பலரும் அவை உண்மை என்று நம்பி விடுகின்றனர்.
இவ்வாறு சமூகத்தில் பதற்றைத் ஏற்படுத்த தேச விரோத சக்திகள் முயற்சிக்கின. எனவே, அதுபோன்ற தகவல்களை ஆராய்ந்து பார்க்காமல் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று எஸ்எஸ்பி படை வீரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அது போன்ற தகவல்களை நம்பாமலும், பகிராமலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.
பிரத்யேக உளவுப் பிரிவு ஏன்?: எஸ்எஸ்பி படைப் பிரிவுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள உளவுப் பிரிவானது பூடான் மற்றும் நேபாளத்துடனான நமது எல்லை தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும். இந்த எல்லைகளை குற்றவாளிகளும் பாகிஸ்தானில் இருந்து திரும்பும் பயங்கரவாதிகளும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு சிறப்பு உளவுப் பிரிவு தேவைப்படுகிறது. 
இந்த உளவுப் பிரிவில் 650 களப் பணியாளர்களும் ஊழியர்களும் இடம்பெற்றிருப்பார்கள். பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வந்து செல்ல விசா கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் அந்நாடுகளுடனா எல்லை வழியாக குற்றவாளிகளும், தேசவிரோத சக்திகளும் ஊடுருவி விடுவது பெரிய சவாலாக இருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்தகைய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவே எஸ்எஸ்பி படைப்பிரிவுக்கு என்று பிரத்யேகமாக உளவுப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'ரோஹிங்கயா விவகாரம்: உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்'
மியான்மரில் இருந்து வந்துள்ள ரோஹிங்கயா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக நம் நாட்டில் குடியேறியுள்ளனர். அவர்கள் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் ஒரு பங்கேற்ற ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், 'ரோஹிங்கயா அகதிகள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரோஹிங்கயா முஸ்லிம்களை வெளியேற்றும் அரசின் திட்டம் தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கும்' என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com