மோடியிடம் அமைச்சர் பதவி கேட்டதில்லை

எனக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கேட்டதில்லை என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மோடியிடம் அமைச்சர் பதவி கேட்டதில்லை

எனக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கேட்டதில்லை என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுவாமியின் மனைவி ரோக்ஸ்னா ஸ்வாமி, சுப்பிரமணியன் சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தக வெளியீட்டு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் சுவாமி பேசியதாவது: எனக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று நான் எப்போதும் கேட்டதில்லை. எனக்கு அமைச்சர் பதவி தராமல் இருப்பதில் எந்தத் தவறுமில்லை. பிரதமர் மோடியை நீங்கள் சந்தித்தால் இது குறித்துக் கேட்கலாம். நான் அமைச்சர் பதவி கேட்டதில்லை என்பதை அவரும் உறுதிப்படுத்துவார்.
இப்போது நான் வகித்து வரும் எம்.பி. பதவியைக் கூட நான் கேட்டுப் பெறவில்லை. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் இருந்து எனக்கு ஒருமுறை அழைப்பு வந்தது. அப்போது, நான் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் சிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவன் என்ற முறையில்தான் என்னை எம்.பி.யாகத் தேர்வு செய்தார்கள். இதேபோல, நாளையே என்னை அழைத்து அமைச்சர் பதவிக் கொடுப்பதாகக் கூறினாலும் நான் வியப்படைய மாட்டேன். எனது ஜாதகத்தில் ஜென்மஸ்தானத்தில் இருந்து ராகு விலகிவிட்டதாகவே நினைப்பேன். நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
உன்னால் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியுமோ, அந்த அளவுக்குச் சிறப்பாக செயல்படு, மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு சிறப்பானதைச் செய்கிறாயோ, அதையே நீயும் பெறுவாய் என்பதை எனது வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டுள்ளேன். நான் கீழே விழுந்தாலும், அதைவிட 10 மடங்கு அதிகமாக உயர்வேன் என்று எனது ஜோதிடர் கூறியுள்ளார். நான் எனது சுயசரிதையை எழுதினால், பலர் தங்களது மரியாதையை இழந்துவிடுவார்கள் என்று சுவாமி தெரிவித்தார்.
6 முறை எம்.பி.யாக இருந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, 1990-91-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com