இணையவழி நிதி மோசடிகளை தடுக்க புதிய சட்டங்கள்: ராஜ்நாத் சிங் முடிவு

இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இணையவழி நிதி மோசடிகளை தடுக்க புதிய சட்டங்கள்: ராஜ்நாத் சிங் முடிவு

இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனைகளையும், இணையவழிப் பணப் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் டெபிட், கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங், இ-வாலட் போன்ற மின்னணு, இணையவழிப் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் இதில் பல்வேறு வகைகளில் நிதி முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன.
இவற்றைத் தடுப்பதற்கு போதிய சட்டங்கள் இல்லாததால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள முடிவதில்லை. இணைய வழி நிதி முறைகேடுகள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மட்டுமே அந்தச் சேவைகளை வழங்கும் வங்கிகளும் மேற்கொண்டு வருகின்றன. எனினும், இதுபோன்ற இணையவழி நிதி மோசடியில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இது தொடர்பான உயர்நிலைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இணைய வழி நிதி மோசடிகளைத் தடுக்க சட்டரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் நடவடிக்கை எடுக்க முடிவு மேற்கொள்ளப்பட்டது. இணையவழி நிதி மோசடிகள் நடைபெறாமல் கண்காணிக்க புதிய தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும். 
இணையவழி நிதி மோசடி தொடர்பான குற்றங்களை விசாரணையை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும். இது தொடர்பான விசாரணையில் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.
இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகளில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 496 இணைய வழித் தாக்குதல்களும், இணைய வழி நிதி மோசடிகளும் நிகழ்ந்துள்ளன. இவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகளின்படி கடந்த 2013-ஆம் ஆண்டில் 5,693, 2014-ஆம் ஆண்டில் 9,622, 2015-ஆம் ஆண்டில் 2016-ஆம் ஆண்டில் 11,592 இணையவழி நிதி மோசடிகள் நிகழ்ந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com