இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது உண்மைதான்: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது உண்மைதான் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது உண்மைதான்: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது உண்மைதான் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஆய்வு தெரிவித்துள்ளது.
முன்னதாக, வளர்ச்சியைக் கணக்கிடப் பயன்படுத்தும் சில 'தொழில்நுட்பக் காரணங்களால்' இந்தியப் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியிருந்தார். அதற்கு அடுத்தநாளிலேயே இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது உண்மைதான் என்று எஸ்பிஐ கூறியுள்ளது.
இது தொடர்பான ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே இந்தியப் பொருளாதாரத்தில் சுணக்கம் நிலவி வருகிறது. அதுதான் இந்த நிதியாண்டில் முதல் காலாண்டிலும் எதிரொலித்தது. இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசு தனது செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும். இப்போதைய சூழ்நிலையில் அரசிடம் உள்ள ஒரே வழியும் அதுதான். இந்தியப் பொருளாதாரம் இப்போதைய நிலையில் இருந்து மீள்வதற்கு சிறிய உத்வேகம் தேவைப்படுகிறது. அதனை அரசு அளிக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் செலவுகளைக் கண்டறிந்து அதில் அரசு கவனமாக பணத்தை செலவிட வேண்டும். இதேபோன்ற வழிமுறைகளை முந்தைய அரசுகளும் கையாண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 6-ஆவது காலாண்டாக குறைந்துள்ளது குறித்தும், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாக 5.7 சதவீதம் என்ற அளவுக்கு வளர்ச்சி குறைந்துவிட்டது தொடர்பாக திங்கள்கிழமை கருத்து தெரிவித்த அமித் ஷா, 'சில தொழில்நுட்பக் காரணங்களால்தான் இப்போது பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-14-ஆம் ஆண்டில் 4.7 சதவீதமாகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி பின்னர் 7.1 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்தது' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரது கருத்துக்கு மாறாக எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. மேலும், இந்தியப் பொருளாதாரம் சரிந்து வருவது தாற்காலிகமானதுதான் என்றும் உறுதியாகக் கூற முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com