இந்தியா-பாக். இடையே எல்லைப்பகுதி மோதலுக்கு முடிவு கட்ட வேண்டும்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லையில் நடைபெறும் மோதல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா-பாக். இடையே எல்லைப்பகுதி மோதலுக்கு முடிவு கட்ட வேண்டும்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லையில் நடைபெறும் மோதல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய தங்தார் செக்டார் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எல்லையில் அமைதியைப் பராமரிக்கப் பாடுபடுமாறு இரு நாட்டுத் தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். இரு தரப்பு மோதல்களால் இந்த மாநில மக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொல்லப்படவும், இடம்பெயர்ந்து செல்லவும், இருதரப்பிலும் சொத்துகள் சேதமடையவும் இந்த மோதல்கள் வழிவகுத்தன.
ஜம்மு-காஷ்மீரிலும், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு தெற்காசிய நாடுகளிலும் அமைதி நிலவுவது, இந்தப் பிராந்தியத்தின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அவசியமாகும்.
இந்த மாநில மக்கள் தங்களுக்கு பள்ளி, மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள் வேண்டும் என்று கோர வேண்டிய நேரத்தில், அதற்குப் பதிலாக தங்களுக்குப் பதுங்கு குழிகள் வேண்டும் என்று கோர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இரு நாடுகளுக்கு இடையே கடந்த 70 ஆண்டுகளாக நீடித்து வரும் விரோதத்தால் என்ன சாதித்தோம் என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்துவது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வாகும். 
அமைதி மற்றும் ஒத்துழைப்புடன், மக்களின் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளைத் திறந்து விட முடியும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீத்வால் மற்றும் தங்தார் பகுதிகளை பெரிய சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த முடியும். அது, லடாக் சுற்றுலாத்தலத்தைப் போல் இப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்றார் மெஹபூபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com