சகிப்பின்மையே இந்தியா எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்னை: ராகுல் தாக்கு

''சகிப்பின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவையே, இந்தியா எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்னைகள்'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சகிப்பின்மையே இந்தியா எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்னை: ராகுல் தாக்கு

''சகிப்பின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவையே, இந்தியா எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்னைகள்'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன், மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு 2 வார சுற்றுப்பயணமாக சென்றுள்ள ராகுல் காந்தி, அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.
அமெரிக்கன் புராக்ரஸ் சென்டர் எனும் அமைப்பின் சார்பில் ராகுல் காந்தியுடன் இந்தியா-தெற்காசிய விவகார நிபுணர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், அந்த அமைப்பின் தலைவர் நீரா டாண்டன், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வெர்மா, முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் பிரசார ஆலோசகர் ஜான் போடெஸ்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகையிலுள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தெற்காசிய விவகாரத்தை கையாண்டு வரும் அமைப்பின் தலைவர் லிசா கர்டிஸ், ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது ராகுல் காந்தியிடம், இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு குறித்தும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பால் அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியாவுக்கான புதிய கொள்கை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
இதையடுத்து, இந்திய -அமெரிக்க வர்த்தக கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது, ராகுல் காந்தியை அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவரும், தலைமைச் செயலதிகாரியுமான தாமஸ் ஜே. தோனுக் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன், மத்தியில் ஆளும் அரசுக்கு இல்லை என்றும், இதனால் இந்தியா அபாயகரமான சூழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது போல் தாம் உணர்வதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு ராகுல் காந்தி அதிகாரபூர்வமில்லாத பேட்டியளித்தார். அப்போது உலகம் முழுவதும் சகிப்பின்மை அதிகரித்து வருவதற்கு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் புனித் அலுவாலியா, அமெரிக்க வெளிநாட்டு கொள்கை நிறுவனத்தைச் சேர்ந்தோரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து அலுவாலியா கூறுகையில், 'பிரச்னை குறித்து சரியாக புரிந்து கொள்ளாத நபராக அவரை (ராகுல் காந்தி) பார்க்கக் கூடாது. பிரச்னையை அவர் நன்றாக புரிந்து வைத்துள்ளார். சமூகத்தில் அடிமட்டத்தில் இருப்போரை புரிந்து கொள்ளும் தலைவர்களைக் காட்டிலும், அவர் சிறப்பாக உள்ளார்' என்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலரும், சகிப்பின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவையே இந்தியா எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்னைகள் என்ற ராகுல் காந்தியின் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அதேபோல், ராகுல் காந்தி குறித்து இதற்கு முன்பு தாங்கள் நினைத்திருந்த கருத்துகள், அவருடனான சந்திப்புக்குப் பிறகு மாறி விட்டதாகவும், ராகுல் காந்தியின் புத்திகூர்மை அபாரமாக இருப்பதாகவும் அவர்கள் புகழ்ந்துள்ளனர்.
ராகுல் காந்தியின் எதிர்ப்பாளர்களால் முழுநேர பணியில் அமர்த்தப்பட்டிருப்பவர்கள், அவரை பற்றி எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கி வைத்திருப்பதாகவும், ஆனால் உண்மையில் ராகுல் காந்தி நல்ல சிந்தனையாளர், பிரச்னையை எளிதில் புரிந்து கொள்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் சர்வதேச அமைப்பின் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com