சங்கர்சிங் வகேலா தலைமையில் குஜராத்தில் புதிய அணி

குஜராத்தில் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா தலைமையில் புதிய அணி உதயமாகியுள்ளது.
சங்கர்சிங் வகேலா தலைமையில் குஜராத்தில் புதிய அணி

குஜராத்தில் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா தலைமையில் புதிய அணி உதயமாகியுள்ளது. அந்த அணி, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்று வகேலா அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் இதுதொடர்பாக வகேலா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஜன் விகல்ப் எனும் அணியை, ஆமதாபாதைச் சேர்ந்த சிலர் தொடங்கினர். அவர்கள் மாநிலத்தை ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு மாற்றாக என்னை செயல்படும்படி கேட்டுக் கொண்டனர். குஜராத் மாநில மக்களில் பெரும்பாலானோர், என்னை முதல்வராக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு எனது ஆதரவை அளிப்பது என்று முடிவெடுத்தேன். அப்போது அவர்களுடன் நான் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அந்த அணிக்கு நான் தலைமை தாங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இது அரசியல் கட்சி கிடையாது. தற்போது நடைமுறையில் இருக்கும் அரசு அமைப்பு மீது அதிருப்தியில் இருக்கும் மக்களின் குரலை வெளிப்படுத்தும் அணியாகும். ஜன் விகல்ப் அணிக்கு ஆதரவை தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன். இந்த அணியானது, விவசாயிகள், பெண்கள், வணிகர்கள், வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்.
குஜராத் சட்டப் பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவும் எனக்கு இல்லை. இதை ஏற்கெனவே நான் தெரிவித்து விட்டேன். அதேநேரத்தில், தேர்தலில் ஜன் விகல்ப் அணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, முதல்வராக என்னை பதவியேற்க வேண்டும் என்று கேட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்கள். அப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுடன் நிச்சயம் கலந்தாலோசனை செய்வேன்.
ஜன் விகல்ப் அணியில் மேலிடம் என்று யாரும் கிடையாது. உள்ளுர் நிர்வாகிகளே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள். அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் பிரைமரிஸ் அமைப்பு முறையை நாங்கள் பின்பற்றுவோம்.
குஜராத்தில் 3-ஆவது அணி வெற்றி பெறாது என்ற கருத்து நிலவுகிறது. தில்லி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 3-ஆவது அணி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. குஜராத்தில் கூட, இதற்கு முன்பு சீமான்பாய் படேல் 3-ஆவது அணியை அமைத்து மாநிலத்தில் ஆட்சியமைத்தார் என்று சங்கர்சிங் வகேலா கூறினார்.
குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவராக விளங்கிய சங்கர்சிங் வகேலா, அக்கட்சியின் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்தலிலும் காங்கிரஸை எதிர்த்து வாக்களித்தார். எனினும், தனது அடுத்த அரசியல் திட்டம் தொடர்பான அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com