தாவூத் இப்ராஹிமின் சகோதரரை 8 நாள் காவலில் விசாரிக்க போலீஸுக்கு அனுமதி: தாணே நீதிமன்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில், கட்டுமான நிறுவன அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸ்கர் உள்ளிட்ட 3 பேரை 8 நாள்கள் காவலில்

மகாராஷ்டிர மாநிலத்தில், கட்டுமான நிறுவன அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸ்கர் உள்ளிட்ட 3 பேரை 8 நாள்கள் காவலில் விசாரிப்பதற்கு போலீஸாருக்கு தாணே நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தாணே, மும்பை பகுதிகளைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர்களிடம், பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் பெயரை தெரிவித்து, பணம் கேட்டு மிரட்டியதாக காஸ்கர் மீது தாணே நகர காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காஸ்கரின் தொலைபேசி அழைப்புகளை காவல்துறையினர் கண்காணித்தபோது, தாவூத் இப்ராஹிமின் பெயரைச் சொல்லி, பணம் கேட்டு காஸ்கர் மிரட்டலில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மும்பையின் நாக்படா பகுதியில் உள்ள காஸ்கரின் சகோதரியின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு சென்று, காஸ்கரை காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். அவரிடம் திங்கள்கிழமை இரவு முழுவதும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவரை கைது செய்தனர்.
மேலும் இருவர் கைது: இந்த விசாரணையில் கிடைத்த தகவலின்படி, காஸ்கரின் உதவியாளர்களான மும்தாஜ் ஷேக், இஸ்ரார் அலி ஜமீல் சையது ஆகிய 2 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தாணேயில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காஸ்கர், அவரது 2 உதவியாளர்களை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது காவல்துறையினர் தரப்பில், 'காஸ்கர் உள்ளிட்ட 3 பேரின் குரல் மாதிரிகளை சேகரித்து, பிகாரில் இருந்து மும்பையில் பணம் கேட்டு மிரட்டலில் ஈடுபடும் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்புள்ளதா? என்று ஆய்வு நடத்த வேண்டியுள்ளது; காஸ்கரின் மிரட்டலுக்கு பயந்து, இதுவரையிலும் அவரிடம் எத்தனை பேர் பணம் அளித்தனர் என்பதை தெரிந்து கொண்டியுள்ளது. ஆதலால் 3 பேரையும் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, காஸ்கர், அவரது 2 உதவியாளர்களை 8 நாள்கள் காவலில் விசாரிப்பதற்கு போலீஸாருக்கு அனுமதித்து உத்தரவிட்டார். தாணே நீதிமன்றத்தில் காஸ்கர் உள்ளிட்ட 3 பேரும் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி, நீதிமன்ற வளாகப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனிடையே, தாணே காவல்துறை அதிகாரிகள் கூறியபோது, தாணேயைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் ஒருவரை காஸ்கரும், அவரது உதவியாளர்களும் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மிரட்டி, ரூ.30 லட்சமும், 4 வீடுகளையும் அபகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com