ரோஹிங்கயா முஸ்லிம்களை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் 

ரோஹிங்கயா முஸ்லிம்களை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
ரோஹிங்கயா முஸ்லிம்களை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் 

ரோஹிங்கயா முஸ்லிம்களை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவுடன் பயங்கரவாதச் சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. எல்லைக்கு அப்பாலிருந்து தொடர்ந்து ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், இதற்கு மேலும் ஊடுருவல்காரர்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தியாவிடம் இல்லை. எனவே,
இந்தியாவில் ஏற்கெனவே ஊடுருவியுள்ள ரோஹிங்கயாக்கள் வெளியேற வேண்டும். சட்டவிரோதமாக இந்தியாவில் ஊடுருவியுள்ள அவர்கள் நமது தேசத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.
மியான்மரில் இருந்து அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கயா பிரிவினரை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற செயல் என்று சில அரசியல்வாதிகள் விமர்சிக்கின்றனர். மனிதாபிமானம் என்பது சட்டத்துக்கும் மேற்பட்டது அல்ல.
ரோஹிங்கயா முஸ்லிம்கள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு அவ்வளவு பாசம் என்றால் அவர்களை பாகிஸ்தானே ஏற்றுக் கொள்வது மிகவும் நல்லது. இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகள், ரோஹிங்கயா பிரிவினருக்கு ஆதரவாக உள்ளனர். ரோஹிங்கயா பிரிவினரை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு அவர்களிடம் கூற வேண்டும் என்றார் கிரிராஜ் சிங்.
தற்போது இந்தியாவில் சுமார் 14,000 ரோஹிங்கயாக்கள் தங்கியிருப்பதாக மத்திய அரசு கடந்த மாதம் (ஆகஸ்ட்) 9-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. எனினும், நம் நாட்டில் 40,000 ரோஹிங்கயா முஸ்லிம்கள் தங்கியிருப்பதாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் ஜம்மு, ஹைதராபாத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தில்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது கூறுவது வழக்கம். அவர் முன்பு, ' நரேந்திர மோடியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க முயற்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் ' என்று கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com