வடகொரியாவுக்கு பாக். அணு ஆயுத உதவி செய்வது குறித்து விசாரணை: சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான அணு ஆயுதத் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் தாரோ கோனோ ஆகியோருடன் முத்தரப்பு சந்திப்பை நடத்திய  அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் தாரோ கோனோ ஆகியோருடன் முத்தரப்பு சந்திப்பை நடத்திய  அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

பாகிஸ்தானுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான அணு ஆயுதத் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணையை ஜப்பான் வான்பகுதியில் ஏவிப் பரிசோதித்துள்ள நிலையில் சுஷ்மாவின் கருத்து வெளிவந்துள்ளது.
ஐநா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் தாரோ கோனா ஆகியோருடன் திங்கள்கிழமை முத்தரப்பு சந்திப்பை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, வடகொரியாவின் சமீபத்திய நடவடிக்கைகளை (ஏவுகணைச் சோதனை) அவர் வன்மையாகக் கண்டித்தார். 
மேலும் அந்நாடு அணு ஆயுதத் தொடர்பு வைத்திருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் சுஷ்மா வலியுறுத்தினார் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார். 
வடகொரியாவுக்கு பாகிஸ்தான் அணு ஆயுதம் தொடர்பான உதவிகளை அளிப்பதையே சுஷ்மா சூசகமாக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ரவீஷ்குமார், நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசும்போது, சுஷ்மா குறிப்பிடும் நாடு எது? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு அவர் நேரடியாக பதில் கூறாவிட்டாலும், பாகிஸ்தானையே அவர் சுட்டிக் காட்டுகிறார் என்பது தெளிவானது. ரவீஷ்குமார் கூறியதாவது:
நாங்கள் எந்த நாட்டைப் பற்றி பேசுகிறோம் என்பது குறித்து நான் போதுமான அளவுக்கு தகவல் அளித்துள்ளதாகவே கருதுகிறேன். வடகொரியாவின் அண்மைக்கால நடவடிக்கைகளை நாங்கள் கண்டிப்பதோடு, அந்நாட்டின் அணு ஆயுதத் தொடர்புகள் (பாகிஸ்தானின் உதவி) குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அணு ஆயுதப் பரவல் மட்டுமின்றி கடல்சார் பாதுகாப்பு, பயணத் தொடர்புகள் ஆகியவை குறித்தும் சுஷ்மா உள்ளிட்ட மூன்று தலைவர்களும் விவாதித்தனர். கடல் பயணச் சுதந்திரம், சர்வதேசச் சட்டங்களுக்கு மரியாதை அளித்தல், தகராறுகளை அமைதியான வழியில் தீர்ப்பது ஆகியவற்றை அவர்கள் வலியுறுத்தினர் என்று ரவீஷ்குமார் தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா - ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களிடையே முதலாவது முத்தரப்பு சந்திப்பானது கடந்த 2015-இல் நடைபெற்றது. அதற்கும் முன்பே, 2011-இல் இருந்தே உயரதிகாரிகள் அளவிலான சந்திப்புகள் நடைபெற்று வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com