ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் ராஜ்நாத் கருத்து வஞ்சகமானது: ஓவைஸி

ரோஹிங்யா இஸ்லாமியர்களை சட்டவிரோத குடியேறிகள் என ராஜ்நாத் சிங் கூறியது வஞ்சகமானது என அஸாதுதின் ஓவைஸி வியாழக்கிழமை தெரிவித்தார்.
ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் ராஜ்நாத் கருத்து வஞ்சகமானது: ஓவைஸி

தேசிய அளவிலான மனித உரிமைகள் ஆணையத்தின் நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த 2 நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங், மியான்மரில் இருந்து வெளியேறி வரும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகள் அல்ல, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றார். 

இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அஸாதுதின் ஓவைஸி கூறியதாவது:

ரோஹிங்யா இஸ்லாமியர்களை சட்டவிரோத குடியேறிகள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது வஞ்சகமானது. அதுபோல ரோஹிங்யா இஸ்லாமியர்கள் பாதுகாப்பான முறையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என ஆங் சாங் சூகி தெரிவித்திருப்பது முற்றிலும் தவறான தகவல்.

அவர் பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர்கள் வங்கதேசத்தில் அதுபோன்று பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டிருந்தால் ஆங் சாங் சூகி ஏன் இதுவரை அங்கு செல்லவில்லை.

வங்கதேசம் மியான்மரின் நட்பு நாடு என்றால் அவர் நேரில் சென்று விவரமான பேச்சுவராத்தையில் ஈடுபட்டிருக்கலாமே? சுதந்திரம் குறித்து அவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். முதலில் அதுகுறித்து அவர் நடத்திக் காட்ட வேண்டும். பிறகு அடுத்தவர்க்கு பாடம் கற்பிக்கலாம்.

அமைதிக்கான நோபல் பரிசுவென்றவர்களில் ஆங் சாங் சூகி ஒரு கறும்புள்ளி போன்றவர். 

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இது அனைத்து உலகும் அறிந்ததே.

பர்மாவில் மட்டும் 15 லட்சம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆனால் யாரிடமும் முறையான குடியுரிமைச் சான்றிதழ் இல்லை. அங்கு அவர்கள் முழு சுதந்திரத்துடனும், நிம்மதியாகவும் வாழ்வது கேள்விக்குறிதான்.

மியான்மரில் பாதுகாப்பின்மை காரணமாக வெளியேறிய அந்த 3 லட்சம் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்பதுதான் எனது கேள்வி.

மேலும், இவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com