இந்தியாவும், சீனாவும் உலகை மறுவடிவமைப்பு செய்யும்: ராகுல்

இந்தியாவும், சீனாவும் வெவ்வேறு வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், இரு நாடுகளும் உலகை மறுவடிவமைப்பு செய்யும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு மாணவர்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு மாணவர்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

இந்தியாவும், சீனாவும் வெவ்வேறு வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், இரு நாடுகளும் உலகை மறுவடிவமைப்பு செய்யும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
2 வார பயணமாக, அமெரிக்கா சென்றுள்ள அவர், நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் புதன்கிழமை கலந்துரையாடினார். 
அப்போது, அவர் கூறியதாவது:
இந்தியாவும், சீனாவும் விவசாயம் சார்ந்த பணிகளில் இருந்து நவீன நகரங்கள் கொண்ட நாடுகளாக மாறி வருகின்றன. இவ்விரு நாடுகளும் எப்படி உலகை மறுவடிவாக்கம் செய்யப்போகின்றன என்பது முக்கியமான விஷயமாகும். இவ்விரு நாடுகளும் வளர்ச்சிக்காக வெவ்வேறு பாதையைத் தேர்வு செய்துள்ளன.
சீன அரசு, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து, கடல் வழிப்போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் நோக்கத்துடன் 'ஒரே பாதை, ஒரே மண்டலம்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
எதிர்கால உலகைப் பற்றிய ஒரு தெளிவான தொலைநோக்குத் திட்டம் சீன அரசிடம் உள்ளது. அதே அளவுக்கு இந்தியாவிடம் தொலைநோக்குத் திட்டம் உள்ளதா?
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்த அளவுக்கு ஒத்துழைப்பு நிலவுகிறது? அந்நாட்டுடன் ஒத்துழைப்புடன் இந்திய அரசு செயல்பட வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே போட்டியும், ஒத்துழைப்பும் நிலவ வேண்டியது அவசியமாகும்.
சீனாவுடன் போட்டி போடும் அளவுக்கு இந்திய அரசு சிறப்பாகச் செயல்படவில்லை. அதற்கு, முதலில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு திட்டமிட வேண்டும்.
சீனா, ரஷியா ஆகிய நாடுகளுடனும், அமெரிக்காவுடனும் இந்திய அரசு நட்புறவு கொண்டுள்ளது. அதே நேரம் நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் சமநிலை நிலவ வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடியும்.
காங்கிரஸ் தோல்வி ஏன்?: உலகம் முழுவதும் வேலையின்மை அதிகரித்ததால், அதிருப்தி அடைந்த மக்கள், பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டிரம்ப் போன்ற தலைவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
போதிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியதும், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ஒரு காரணமாகும்.
மக்களில் பெரும்பாலானோர் வேலையின்மையால் தங்களின் எதிர்காலம் பற்றிய கேள்வியோடு உள்ளனர். அவர்கள்தான், மோடி, டிரம்ப் போன்ற தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகள் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், இந்தியாவில் பிரதமர் மோடி, போதிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. நாளொன்றுக்கு 30,000 இளைஞர்கள், வேலைவாய்ப்பு தேடுகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கவில்லை.
ஏற்கெனவே காங்கிரஸ் அரசின் மீது கோபத்தைக் காட்டிய மக்கள், தற்போது மோடி அரசு மீது காட்ட இருக்கிறார்கள். ஆனால், மோடி அரசோ பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, மற்றவர்களைக் குறை கூறி வருகிறது.
முதலில் வேலையின்மை பிரச்னை இருப்பதை ஒப்புக் கொண்டு, அதற்குத் தீர்வுகாண ஒன்றிணைந்து முயல வேண்டும். நாட்டில் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்டதால், வேலைவாய்ப்புகள் குறைந்துவிடாது.
சமூக நல்லிணக்கத்தை சிதைப்பது நாட்டுக்கு ஆபத்து: இந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சியின் கீழ், சிறுபான்மையினர் உள்பட சமூகத்தில் வாழும் சில பிரிவினர் தங்களை அரசின் ஓர் அங்கமாக உணர்வதில்லை. இது மிகவும் அபாயகரமானதாகும். மக்களை அரவணைத்துச் செல்வதில்தான் இந்தியாவின் வலிமை அடங்கியுள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. அதைப் பற்றி நீதிமன்றம் முடிவு செய்யும்.
சமூக நல்லிணக்கத்தை சிதைத்தால், அது நாட்டுக்கு ஆபத்தாக முடியும். சொந்த நாட்டு மக்களை தனிமைப்படுத்தினால், அவர்கள் கலகம் விளைவிக்க வழிவகுக்கும்.
தொலைநோக்குத் திட்டத் தை உருவாக்குவேன்: எனக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்குவேன். அந்த தொலைநோக்குத் திட்டம், வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com