பிகாரில் திறப்பதற்கு முன்பே உடைந்த தடுப்பணை: நிதீஷ் குமார் நிகழ்ச்சி ரத்து

பிகார் மாநிலத்தில் ரூ.389.31 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையின் ஒரு பகுதி திறப்பதற்கு முன்பே இடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், பதேஸ்வரஸ்தான் நகரில் திறப்பதற்கு முன்பே தடுப்பணையின் ஒரு பகுதி புதன்கிழமை உடைந்ததால், குடியிருப்பு பகுதிக்குள் பெருக்கெடுத்து ஓடும் நீர்.
பிகார் மாநிலம், பதேஸ்வரஸ்தான் நகரில் திறப்பதற்கு முன்பே தடுப்பணையின் ஒரு பகுதி புதன்கிழமை உடைந்ததால், குடியிருப்பு பகுதிக்குள் பெருக்கெடுத்து ஓடும் நீர்.

பிகார் மாநிலத்தில் ரூ.389.31 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையின் ஒரு பகுதி திறப்பதற்கு முன்பே இடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாநிலத்தில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பதேஸ்வரஸ்தான் நகரில், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாசன வசதிக்காக இந்தத் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
1997-ஆம் ஆண்டு, ரூ.13.88 கோடியில் இந்தத் தடுப்பணைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பிறகு, கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டப் பணிகள், 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டன. பணிகள் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல்வர் நிதீஷ் குமார், மாநில நீர்வளம் மற்றும் பாசனத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் லல்லன் ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடைடேய, அந்த தடுப்பணையில் இருந்து பரிசோதனைக்காக செவ்வாய்க்கிழமை மாலை மோட்டரை இயக்கி, தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது, தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கங்கை நதி நீரானது, அதிக விசையுடன் வெளியேறியதால், அணையின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர், அருகில் உள்ள கஹல்கான் நகர், தேசிய அனல் மின் கழகக் குடியிருப்பு பகுதி, நீதிபதிகள் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது.
உடனடியாக, மணல் மூட்டைகள் கொண்டு அணையில் ஏற்பட்டிருந்த உடைப்பு தாற்காலிகமாக சரி செய்யப்பட்டது.
நீர்வளத் துறைச் செயலர் அருண் குமார் சிங், சார் ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் பார்வையிட்டு, குடியிருப்பு பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தடுப்பணை உடைந்ததால், முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, தடுப்பணைக் கட்டுமானப் பணிகளில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி, நிதீஷ் குமார், அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து ராஷ்ட்ரீய ஜனதா தளத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணைக்கு உத்தரவு: இதனிடையே, தடுப்பணை உடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் லல்லன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com