அமெரிக்காவில் ராகுல் உரை: பாஜக விமர்சனத்துக்கு காங்கிரஸ் பதிலடி

நமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உரை நிகழ்த்தியிருப்பதாக பாஜக தெரிவித்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ்
அமெரிக்காவில் ராகுல் உரை: பாஜக விமர்சனத்துக்கு காங்கிரஸ் பதிலடி

நமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உரை நிகழ்த்தியிருப்பதாக பாஜக தெரிவித்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், சகிப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அமெரிக்காவில் ராகுல் காந்தி மிக தைரியமாக பேசியிருக்கிறார். அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவரது கருத்துகள் மிகச் சரியானதாகும். நமது நாட்டில் வன்முறை, பயம் ஆகியவற்றை பாஜக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. இங்கு என்ன பிரச்னை நிலவுகிறதோ அதை மட்டுமே ராகுல் காந்தி பேசினார்.
அப்படி பார்த்தால் வெளிநாட்டில் இந்தியர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
'பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 60 ஆண்டுகளாக ஊழல் நாட்டில் இருந்ததற்காக இந்தியர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள எங்கள் தேச மக்கள் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தனர்' என்று வெளிநாட்டில் மோடி பேசினார். அவ்வாறு பேசியதன் மூலம் நமது தேசத்தின் பெயருக்கு அவர்தான் களங்கம் ஏற்படுத்தினார்.
ராகுலுக்கு கருத்துகளை தெரிவிக்க உரிமை இருக்கிறது. அவருக்கு கருத்து கூற உரிமை இல்லை என்று பாஜகவினர் சொன்னால் அது ஜனநாயகத்தை அவமதிப்பது போன்றதாகும் என்றார் ஆனந்த் சர்மா.
'ராகுல் தனது உரையின் மூலம் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சில விஷயங்களை கொண்டு சென்றிருக்கிறார்' என்று காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
'இரண்டு வார கால அமெரிக்கப் பயணத்தில் பலரைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் இந்தியாவின் பாரம்பரியமான சகிப்புத்தன்மைக்கு என்ன ஆனது? என்று என்னிடம் வருத்தப்பட்டனர்' என்று சமூக வலைதளமான சுட்டுரையில் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com