இந்தியாவின் நன்மதிப்பை பிரிவினைவாத சக்திகள் சீர்குலைத்து வருகின்றன: ராகுல் வேதனை

உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை பிரிவினைவாத சக்திகள் சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வேதனைத் தெரிவித்தார். மத்தியில் ஆட்சிபுரியும்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே உரை நிகழ்த்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே உரை நிகழ்த்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை பிரிவினைவாத சக்திகள் சீர்குலைத்து வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வேதனைத் தெரிவித்தார். மத்தியில் ஆட்சிபுரியும் பாஜக அரசை மறைமுகமாக தாக்கும் வகையில் ராகுல் இவ்வாறு பேசியுள்ளார்.
அமெரிக்காவில் ஒரு வாரகாலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அங்கு பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி வருகிறார்.
இந்நிலையில், தமது சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை, அமெரிக்கவாழ் இந்திய மக்களை ராகுல் சந்தித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
உலகிலேயே மிகவும் தொன்மையான நாகரீகத்தைக் கொண்டுள்ள இந்தியா, மற்ற நாடுகள் அனைத்துக்கும் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. மக்கள் எவ்வாறு நல்லிணக்கத்துடனும், அமைதியுடனும் வாழ வேண்டும் என உலகுக்கே கற்றுக்கொடுத்த நாடு இந்தியா. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான நன்மதிப்பினை இந்தியா பெற்றிருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் இந்தத் தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்திய மக்களின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் சில பிரிவினைவாத சக்திகள் சிதைத்து வருகின்றன. அது, நமது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. அதுமட்டுமன்றி, அந்த தீய சக்திகளின் செயல்களால், உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பும் சீர்குலைந்து வருகிறது என்பதுதான் மிகவும் வேதனையானது.
அமெரிக்காவில் நான் சந்தித்த அரசியல்வாதிகள் அனைவரும் என்னிடம் ஒரே ஒரு கேள்வியைதான் முன்வைக்கின்றனர். ''இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு தற்போது என்னவாகிக் கொண்டிருக்கிறது?'' என்பதுதான் அந்தக் கேள்வி. இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பைக் காப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய சொத்தே நமது ஒற்றுமைதான். உலக நாடுகள் அனைத்தும் நம்மைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கான காரணமும் அதுதான். எவ்வாறு இத்தனை இன மக்களும் ஒரே நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதே அவர்களின் ஆச்சரியத்துக்கு காரணம். இந்த ஒரு விஷயத்துக்காக மட்டுமே, இந்தியாவை உலகமே மதித்து வருகிறது. அந்த மதிப்பினை நாம் இழந்துவிடக் கூடாது.
இந்தியாவில் தற்போது பிரிவினைவாத அரசியல் நடைபெற்று வருகிறது. அது, நமது நாட்டின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தியா என்பது ஏதேனும் ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ மட்டுமே சொந்தமான நாடு கிடையாது. 
என்.ஆர்.ஐ.-களுக்கு அழைப்பு: இந்தியாவின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதனை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றியமைத்தவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்பது தெரியவரும். ஆம், மகாத்மா காந்தியும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர்தான். ஜவாஹர்லால் நேருவும் இங்கிலாந்துக்குச் சென்று திரும்பியவர்தாம். அதேபோல், சட்டமேதை அம்பேத்கர், மௌலானா ஆஸாத் என அனைவரும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களே.
இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து தாங்கள் கற்றவற்றை இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தினார்கள். அந்த வகையில் பார்த்தோமேயானால், இந்தியாவின் முதுகெலும்பே நீங்கள்தான் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்). எனவே, இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நீங்கள் உதவ வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com