காஷ்மீரில் பிரிவினைவாதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாஜக

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, பிரிவினைவாதிகள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இருப்பதாக பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ்
காஷ்மீரில் பிரிவினைவாதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாஜக

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, பிரிவினைவாதிகள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இருப்பதாக பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் தெரிவித்தார்.
இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: முந்தைய காலங்களை ஒப்பிடும்போது, ஜம்மு-காஷ்மீரில் தற்போது அமைதியான சூழலே நிலவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன.
பயங்கரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்டவற்றால் காஷ்மீர் மக்கள் அதிக அளவிலான துன்பங்களை சந்தித்துவிட்டனர். இனி அவர்களை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதே மத்திய அரசின் ஒரே குறிக்கோளாகும்.
நமது அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பிரச்னைகளை உருவாக்க முயன்று வருகிறது. எனினும், அவர்களின் முயற்சிகளை நமது ராணுவ வீரர்கள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது பாதுகாப்புப் படையினருடன் சிலர் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இது, மாநிலத்தின் நலனுக்கு உகந்தது அல்ல. காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை ஒன்றே சிறந்த வழியாகும்.
அந்த வகையில், காஷ்மீரில் அனைத்துத் தரப்பினருடனும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்கின்றன. அவர்கள் பிரிவினைவாதிகளாக இருந்தாலும், அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த விவகாரத்தில், அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைத்தால், ஜம்மு-காஷ்மீரில் வெகுவிரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றார் ராம் மாதவ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com