பனாமா ஆவணத்தில் சிக்கிய இந்தியர்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

பனமா ஆவணங்களில் இடம் பெற்றிருந்த இந்தியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பனமா ஆவணங்களில் இடம் பெற்றிருந்த இந்தியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்திடம் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கசிந்தன. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்களின் கருப்புப் பணம், ரகசியமான வெளிநாட்டு முதலீடுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி இது தொடர்பாகக் கூறியதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்து வாக்குகளை மோடி பெற்றார். 
பனமா ஆவணங்களில் இடம் பெற்றிருந்த 500 பேர் மற்றும் அவர்களது கருப்புப் பணம், வெளிநாட்டு முதலீடுகள் குறித்த விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளன. கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மோடி பிரதமராகப் பதவியேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், பனாமா ஆவணங்களில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் பலர் மோடியின் ஆதரவாளர்கள், அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் ஆவர்.
பனாமா ஆவணங்களில் பெயர் இடம் பெற்றிருந்த ஐஸ்லாந்து பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட பலர் பதவியை இழந்துவிட்டனர். ஆனால், இந்தியாவில் ஒருவர் மீது கூட நடவடிக்கை இல்லை என்றார் அவர்.
பனாமா ஆவணங்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டிஎல்எஃப் உரிமையாளர் கே.பி. சிங் அவரது குடும்பத்தினர் 9 பேர், வினோத் அதானி உள்ளிட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com