மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: மோடிக்கு சோனியா கடிதம்

மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: மோடிக்கு சோனியா கடிதம்

மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அந்த மசோதாவை, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண் உறுப்பினர்கள் மொத்தம் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். சர்வதேச அளவில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் விகிதம் சராசரியாக 21.4 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், பாலினப் பாகுபாடுக்கு எதிராகப் போராடவும், பெண்கள் அதிகாரம் பெறவும் வழிவகுக்கும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். செப்டம்பர் 20-ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்தபோது, கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வெவ்வேறு காரணங்களால், அந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், ஆளும் பாஜக கூட்டணிக்கு மக்களவையில் தற்போது பெரும்பான்மை உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் எப்போதும் முழு ஆதரவு அளிக்கும்.
இதற்கு முன், ஊராட்சி, நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக, சட்டத் திருத்த மசோதாக்களை கொண்டுவருவதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன் முயற்சி மேற்கொண்டார்.1989-ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்ட அந்த மசோதாக்கள், கடந்த 1993-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறின என்று அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சோனியா காந்தி எழுதிய அந்தக் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் மகளிரணித் தலைவி சுஷ்மிதா தேவ், தில்லியில் செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டினார்.பின்னர் அவர் கூறியதாவது: 
கடந்த 3 ஆண்டுகளில், நாடாளுமன்ற விவாதங்கள் உள்பட பல்வேறு தருணங்களில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது.
இதுதொடர்பாக, பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தும், தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து கடிதங்கள் வருவதாக அப்போதைய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். அந்த மசோதா நிறைவேறுவதற்கு 6 மாதம் முதல் ஓராண்டு வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குள், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு விடும் என்று நாட்டு பெண்களுக்கு பிரதமர் மோடி உறுதியளிக்க வேண்டும் என்று சுஷ்மிதா தேவ் கூறினார்.
தாமதம் ஏன்? மத்திய அரசு விளக்கம்
பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாகவே, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற இயவில்லை என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா விவகாரத்தை சோனியா காந்தி அரசியலாக்குகிறார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால், தங்களது சொந்தக் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளை மீறி, மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த முடியவில்லை. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே, இந்த மசோதா நிறைவேற்றப்படலாம். இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு வெற்றி பெற்று விட்டால், அது, அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் என்றார் அவர்.
மேலும், 'இந்த மசோதாவால், அதிகம் படித்த, வசதி படைத்த உயர் ஜாதியைச் சேர்ந்த பெண்களே அதிகம் பலனடைவார்கள். எனவே, மகளிர் மசோதாவில், ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று அவர்கள் வலியுறுத்தினர். எனவே, மசோதா நிறைவேற முடியாமல் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com