மருத்துவக் கல்லூரி முறைகேடு: ஓய்வுபெற்ற நீதிபதி உள்பட 5 பேர் கைது

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் ஒரு தரப்புக்குச் சாதகமாகச் செயல்பட்டதுடன், அதற்காக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி முறைகேடு செய்ய முயன்றதாக

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் ஒரு தரப்புக்குச் சாதகமாகச் செயல்பட்டதுடன், அதற்காக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி முறைகேடு செய்ய முயன்றதாக ஒடிஸா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி உள்பட 6 பேரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 4 நாள் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர். 
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
பிரசாத் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் உள்ளது. அங்கு, போதிய வசதிகளோ, தரமோ இல்லை என்றும், மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து அந்தக் கல்லூரியில் இரு ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மாநில அரசு தடை விதித்தது.
இதை எதிர்த்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மாணவர் சேர்க்கை நடத்த வகை செய்யும்படி தீர்ப்பு வெளியாக வேண்டும் என்பதற்காக ஒடிஸா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குதுசியை அவர்கள் அணுகியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கை ஒரு தரப்புக்கு சாதகமாக மாற்ற குதுசி முயன்றதாகப் புகார் எழுந்தது. மேலும், சட்டரீதியாக சில உதவிகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு அவர் வழங்கியதாகவும் கூறப்பட்டது. இதற்காக கணிசமான தொகை கைமாறியதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரூ. 1.86 கோடிரொக்கம் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி குதுசி, மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் பி.பி.யாதவ், பலாஷ் யாதவ், இடைத்தரகர் விஸ்வந்த் அகர்வாலா, அன்னியச் செலாவணி தரகர் ராம்தேவ் சரஸ்வத் உள்பட 6 பேரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு கைது செய்தனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, அவர்கள் அனைவருக்கு எதிராகவும், சதித் திட்டம் மற்றும் லஞ்சத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கைதானவர்களை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள், அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதற்கு ஒப்புதல் அளித்த நீதிபதி, குதுசி உள்ளிட்டோரை 4 நாள் சிபிஐ காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com