மொஹரம் உள்பட அனைத்து நாள்களிலும் துர்கை சிலைகளைக் கரைக்க அனுமதி: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில், மொஹரம் பண்டிகை தினம் உள்பட வரும் 30-ஆம் தேதியில் இருந்து அனைத்து நாட்களிலும் துர்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில், மொஹரம் பண்டிகை தினம் உள்பட வரும் 30-ஆம் தேதியில் இருந்து அனைத்து நாட்களிலும் துர்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா வரும் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. 
ஆண்டுதோறும் இவ்விழாவின் நிறைவு நாளான விஜயதசமியன்றும், அதற்கடுத்த தினங்களிலும் துர்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாகும். 
இந்நிலையில், இந்த ஆண்டு துர்கை சிலைகளைக் கரைப்பதற்கு மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. 
அதன்படி, விஜயதசமி தினமான 30-ஆம் தேதியன்று இரவு 10 மணிக்கு மேல் துர்கை சிலைகளைக் கரைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. அதேபோல், அதற்கு அடுத்த தினமான அக்டோபர் 1-ஆம் தேதி முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகை என்பதால் அன்று துர்கை சிலைகளைக் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது.
மேற்கு வங்க அரசின் இந்தத் தடை உத்தரவுகளை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூன்று பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த மனுக்களை தாற்காலிகத் தலைமை நீதிபதி ராகேஷ் திவாரி மற்றும் நீதிபதி ஹரீஷ் டாண்டன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 30-ஆம் தேதி கொண்டாடப்படும் விஜயதசமி பண்டிகை நாளில் இருந்து அனைத்து நாள்களிலும் துர்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். மொஹரம் பண்டிகை நாளான அக்டோபர் 1-ஆம் தேதியன்றும் சிலைகளைக் கரைக்கலாம்.
அவ்வாறு கரைப்பதற்காக துர்கை சிலைகள் கொண்டு செல்லப்படும் வழித்தடங்கள் குறித்து தகவல் அளிக்கும் வகையில் மாநில அரசு ஆங்காங்கே விளம்பரப் பலகைகளை நிறுவ வேண்டும். மேலும் சமூகங்களுக்கு இடையே நட்புறவும், நல்லிணக்கமும் நிலவுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். 
மனுதாரர்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகள் தொடர்பாக, துர்கா பூஜை விடுமுறைக்குப் பிறகு மூன்று வாரங்களுக்குள் மாநில அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீது மனுதாரர்கள் தங்கள் பதிலை அடுத்த இரு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும். 
இந்த விடுமுறைக்கு 5 வார ங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, தங்களின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு திரிணமூல் காங்கிரஸ் அரசு வழக்குரைஞர் முன்வைத்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது: மம்தா ஆவேசம்
இதனிடையே, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
அமைதியைப் பராமரிக்க என்னால் முடிந்ததைச் செய்வேன். சிலர் எனது குரல்வளையை அறுக்கலாம். ஆனால், நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் கூற முடியாது. நான் சதிக்கு அடிபணிய மாட்டேன். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்குச் சதியாளர்கள்தான் பொறுப்பு. பதற்றத்தையும் கலவரத்தையும் தூண்டுவோரை விட்டு வைக்க மாட்டேன் என்று மம்தா தெரிவித்தார். பாஜகவையே அவர் இவ்வாறு மறைமுகமாகச் சாடியதாகக் கருதப்படுகிறது. மேலும், கொல்கத்தாவில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலமும, மொஹரம் ஊர்வலமும் வெவ்வேறு பாதைகளில் செல்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றுவது தொடர்பாக மாநில காவல்துறை அதிகாரிகளை மம்தா வெள்ளிக்கிழமை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com