ஊழல், வகுப்புவாதத்தை ஒழிக்க ஒன்றுதிரள வேண்டும்: வெங்கய்ய நாயுடு அழைப்பு

நாட்டிலிருந்து ஊழல், வகுப்புவாதம், ஜாதியவாதம் உள்ளிட்டவற்றை வேரோடு அழிக்க மக்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு
ஊழல், வகுப்புவாதத்தை ஒழிக்க ஒன்றுதிரள வேண்டும்: வெங்கய்ய நாயுடு அழைப்பு

நாட்டிலிருந்து ஊழல், வகுப்புவாதம், ஜாதியவாதம் உள்ளிட்டவற்றை வேரோடு அழிக்க மக்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், திட்ட வல்லுநர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் பங்கேற்ற இந்திய வர்த்தகத் தலைமை மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது: உலக வரலாற்றை புரட்டிப் பார்த்தோமேயானால், ஆயிரக்கணக்கான தடைகளைக் கடந்து சாதனைப் படைத்த மிகச் சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பது தெரியவரும். ஒருகாலத்தில், மன்னராட்சியிலும், பின்னர் ஆங்கிலேயர்களிடமும் இந்தியா பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தது.
பின்னர், இந்த அடிமைத் தளங்களை உடைத்து இந்தியா வெளியே வந்தது. அதன் பின்னணியில் பலரது உயிர்த் தியாகங்களும், ரத்தக் கறைகளும் இருக்கின்றன. அன்றைக்கு, உலக நாடுகள் அனைத்தையும்விட வளர்ச்சியில் நாம் பின்தங்கியிருந்தோம். நம்மிடமிருந்த ஏராளமான வளங்களும், செழுமையும் அன்னியர்களால் சுரண்டப்பட்டிருந்தன.
இருந்தபோதிலும், அந்த அனைத்துத் தடைகளையும் மீறி இந்தியா முன்னேறியது. தற்போது, உலக அளவில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு காரணம், நமது உழைப்பும், ஒற்றுமையும் மட்டுமே என்று கூறினால் அது மிகையாகாது.
வளர்ச்சி மட்டுமே இலக்கு: இன்றைக்கும் நம் நாட்டின் முன்பு ஏராளமான சவால்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கடந்து நாம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். நமது குறிக்கோளும், லட்சியமும் வளர்ச்சியில் மட்டுமே இருக்க வேண்டும்.
நாம் அனைவரும் கொள்கை ரீதியாகவும், அரசியல் கண்ணோட்டத்திலும் மாறுபட்டிருக்கலாம். ஆனால், அந்த அரசியல் மாறுபாடு என்பது தேர்தலுடன் முடிவடைய வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் அந்த வேறுபாடுகளை மறந்து மீண்டும் நாம் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்றுதிரள அழைப்பு...: இன்றைய சூழலில், நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல், வகுப்புவாதம், ஜாதியவாதம், அடிப்படைவாதம், பாலின பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவை பெரும் தடைக் கற்களாக இருக்கின்றன. இவற்றை ஒழிக்காமல் நாம் முழுமையான வளர்ச்சியை அடைய முடியாது. எனவே, இவற்றை வேரோடு அழிக்க மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி அத்தியாயத்தில் நமது பெயரையும் நிலைநிறுத்த நாம் சூளுரைக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் கட்டுப்பாடுகள் அவசியம்: ஜனநாயகம் நிலைக்க வேண்டுமென்றால் அங்கு கட்டுப்பாடுகளும் இருக்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாத ஜனநாயகம் நிலைக்காது. ஒரு ஜனநாயக நாட்டில், தனிநபரின் கருத்து சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானதுதான். அதேசமயத்தில், நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் அந்த கருத்து சுதந்திரம் அமைந்துவிடக் கூடாது. சுதந்திரத்துக்கும் ஒரு வரையறை அவசியம் என்றார் வெங்கய்ய நாயுடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com