சமகால சூழலுக்கு புத்தரின் போதனைகளே பொருத்தமானவை: குடியரசுத் தலைவர்

புத்தர் போதித்த அகிம்சையும், அன்பு நெறிகளும் சமகாலத்துக்கு சாலப் பொருத்தமானவை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் அமைந்துள்ள தீக்ஷாபூமி மையத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தரின் சிலையை வழிபடும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் அமைந்துள்ள தீக்ஷாபூமி மையத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தரின் சிலையை வழிபடும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

புத்தர் போதித்த அகிம்சையும், அன்பு நெறிகளும் சமகாலத்துக்கு சாலப் பொருத்தமானவை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
புத்தரால் தருவிக்கப்பட்ட 'விபாசனா' தியான முறையை உலக நாடுகள் அனைத்துக்கும் பரவச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராம்நாத் கோவிந்த் மகாராஷ்டிர மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றார். குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த மாநிலத்துக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகபுரி விமான நிலையத்துக்கு வந்த ராம்நாத் கோவிந்தை, மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ்,முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராம்தாஸ் அதாவலே ஆகியோர் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து சட்ட மேதை அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய 'தீக்ஷாபூமி' பகுதிக்குச் சென்று குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினர். பின்னர் காம்ப்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சர்வதேச தியான மையத்தை அவர் தொடக்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
புண்ணியத்தையும், ஆன்மிகத்தையும் தன்னகத்தே கொண்டே இடம் மகாராஷ்டிரம். மனஅமைதியைத் தரவல்ல தியானத்துக்கு பெயர் பெற்ற பூமியும் இதுவே. இத்தகைய சிறப்பு மிக்க மகாராஷ்டிர மாநிலத்துக்கு வருகை தருவது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய அவசர வாழ்வில் பல விஷயங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். மனோதிடமும், அமைதியும் இல்லாத வாழ்க்கை முறையே தற்போது நிலவுகிறது. இத்தகைய நிலையை அடையக் கூடாது என்பதற்காகவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'விபாசனா' என்ற தியான முறையை உலகுக்கு கொடையாக கெளதம புத்தர் வழங்கினார்.
'விபாசனா' தியானம் என்பது நமது அக வலிமையை அதிகரிக்கச் செய்யும் ஒப்பற்ற பயிற்சி முறையாகும். அதனை முறையாகக் கற்று பயிற்சி மேற்கொண்டால் மருத்துவத்துக்கு ஈடான பலன்கள் அதில் இருப்பதை உணரலாம்.
யோகாவைப் போன்று இதுவும் ஓர் ஈடில்லா உடற்பயிற்சி. எந்த மதத்தின் கோட்பாடுகளும் அதில் இல்லை. புத்தரின் தியான முறையையும், தத்துவ நிலையையே அது உணர்த்துகிறது. அத்தகைய புகழ்வாய்ந்த 'விபாசனா' தியானத்தை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பேரரசர் அசோகரில் இருந்து டாக்டர் அம்பேத்கர் வரை கடந்த 2,500 ஆண்டுகளில் எண்ணற்றோர் புத்தரின் தத்துவங்களாலும், போதனைகளாலும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அவரது தத்துவங்கள் எக்காலத்துக்கும் ஏற்புடையவை. குறிப்பாக, அவர் காட்டிய அகிம்சை, அன்பு நெறி, கருணை ஆகியவை சமகாலத்துக்குப் பொருத்தமானவை என்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com