லோக்தளம் கட்சித் தலைமையில் மதச்சார்பற்ற அணி: முலாயம் சிங், சிவ்பால் யாதவ் திட்டம்

சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங்கும், அவரது சகோதரர் சிவ்பால் யாதவும் லோக்தளம் கட்சித் தலைமையில் மதச்சார்பற்ற அணியை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்தளம் கட்சித் தலைமையில் மதச்சார்பற்ற அணி: முலாயம் சிங், சிவ்பால் யாதவ் திட்டம்

சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங்கும், அவரது சகோதரர் சிவ்பால் யாதவும் லோக்தளம் கட்சித் தலைமையில் மதச்சார்பற்ற அணியை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமாஜவாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவின் உறவினர் ராம் கோபால் யாதவை லோஹியா அறக்கட்டளை செயலர் பதவியிலிருந்து, முலாயம் சிங் யாதவ் வியாழக்கிழமை நீக்கினார். சமாஜவாதி கட்சியின் மாநில மற்றும் தேசிய மாநாடுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அவரது இந்நடவடிக்கை இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதையே வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், லோக் தளம் கட்சித் தலைமையில் மதச்சார்பற்ற
அணியை அமைப்பதற்கு முலாயம் சிங்கும், சிவ்பால் சிங் யாதவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து லோக் தளம் கட்சியின் தேசியத் தலைவர் சுனில் சிங், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
லோக் தளம் கட்சியின் நிறுவன உறுப்பினரான முலாயம் சிங்கும், அவரது சகோதரர் சிவ்பாலும் எங்களுடன் இணையவுள்ளனர். மேலும், மதச்சார்பற்ற அணி அமைப்பதற்கான பணியிலும் ஈடுபடவுள்ளனர். இதுதொடர்பாக எங்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை வரும் திங்கள்கிழமை சந்திக்கவுள்ளனர்.
சிவ்பால் யாதவுடன் பேசிவிட்டேன். லோக்தளம் தலைமையில் மதச்சார்பற்ற அணி அமைப்பதற்கான பணியைத் தொடங்கவுள்ளோம் என்றார் சுனில் சிங்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, சமாஜவாதி மதச்சார்பற்ற அணியை உருவாக்கப் போவதாக சிவ்பால் யாதவ் அறிவித்திருந்தார். இந்நிலையில், முலாயம் சிங்கும், சிவ்பால் யாதவும் சேர்ந்து மதச்சார்பற்ற அணியை உருவாக்க போவதாக தகவல்கள் வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதுதொடர்பாக சிவ்பால் யாதவுக்கு நெருக்கமானவர் ஒருவர் கூறுகையில், 'சமாஜவாதி கட்சியில் அமைதி ஏற்படுவதற்கான சூழல் எதுவும் காணப்படவில்லை. எனவே, எதிர்காலம் குறித்து தீர்மானிக்க வேண்டிய முக்கிய கட்டத்தில் சிவ்பால் உள்ளார்' என்றார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், சிவ்பால் யாதவும் வரும் 25ஆம் தேதி முலாயம் சிங் முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தார். 
லோக்தளம் கட்சித் தலைமையில் முலாயமும், சிவ்பாலும் செயல்படப் போவதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறித்த கேள்விக்கு, சிவ்பாலின் மற்றொரு ஆதரவாளர் பதிலளிக்கையில், 'சமாஜவாதி என்ற பெயரை முலாயம் சிங் கைவிடுவதற்கு வாய்ப்பில்லை; தனது எதிர்காலத் திட்டம் குறித்து முலாயம் சிங் வரும் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிடும்போது, இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைக்கும்' என்றார்.
தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் ஆவணங்களின்படி, லோக்தளம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டில் இக்கட்சியை சோஷலிஸ்ட் தலைவர் சரண் சிங் தொடங்கினார். அக்கட்சியின் நிறுவன உறுப்பினர் முலாயம் சிங் ஆவார். லோக் தளம் கட்சியின் பழையத் தேர்தல் சின்னம், உழவர் உழவுத் தொழிலில் ஈடுபடுவது ஆகும். 
இந்த சின்னத்தில் சரண் சிங் போட்டியிட்டே, உத்தரப் பிரதேச முதல்வரானார். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி, காங்கிரஸ் கூட்டணிக்கு முலாயம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, லோக் தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முலாயமுக்கு சுனில் சிங் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com