அரசுக் கல்லூரிகளின் அலங்கோலம்: கர்நாடக அமைச்சருக்கு பள்ளி மாணவியின் பகிரங்க சவால்! 

கர்நாடக மாநில அரசுக் கல்லூரிகளின் அவல நிலையை  முதலில் நீக்கி விட்டு பின்னர் அங்கு மாணவர்களை சேர்ப்பதைப் பற்றிப் பேசுங்கள் என பள்ளி மாணவியொருவர் கர்நாடக சமூக நலத்துறை அமைச்சருக்கு பகிரங்க சவால்.. 
அரசுக் கல்லூரிகளின் அலங்கோலம்: கர்நாடக அமைச்சருக்கு பள்ளி மாணவியின் பகிரங்க சவால்! 

சித்ரதுர்கா: கர்நாடக மாநில அரசுக் கல்லூரிகளின் அவல நிலையை  முதலில் நீக்கி விட்டு பின்னர் அங்கு மாணவர்களை சேர்ப்பதைப் பற்றிப் பேசுங்கள் என பள்ளி மாணவியொருவர் கர்நாடக சமூக நலத்துறை அமைச்சருக்கு பகிரங்க சவால் விட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பி.யு அரசுக் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 'பிரதிபா கரஞ்சி' என்னும் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் பேசும் பொழுது, 'மக்கள் அரசு கல்லூரிகளை புறக்கணிக்கக் கூடாது. அரசுக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, சமூகத்தில் மகத்தான செயல்களை செய்தவர்கள் ஏராளம் பேர் உண்டு. சர் விஸ்வேசரையா, யு.ஆர்.ராவ் உள்ளிட்ட நிறைய பேரை நாம் உதாரணமாக காட்ட முடியும என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஆஞ்சநேயா தன்னுடைய பேச்சினை முடித்து மேடையிலிருந்து கீழே இறங்கியதும், வித்ய விகாஸ் என்னும் ஆங்கிலப்பள்ளியினைச் சேர்ந்த நயன ஜோகி என்னும் சிறுமி அவரை அணுகினாள்.  பின்னர் அவள் அமைச்சரிடம், 'நீங்கள் அரசுக் கல்லூரிகளில் உள்ள பிரச்சினைகளை  தீர்ப்பதாக உறுதிமொழி கொடுத்தால், நான் என்னுடைய படிப்பினை அரசுக் கல்லூரியில் சேர்ந்து தொடர்கிறேன். அங்கு முறையான உள்கட்டமைப்பு வசதிகளோ, ஆரோக்கியமான சூழலோ இல்லை. முதலில் இவை எல்லாம் கவனித்து சீர் செய்யப்படும் என்று உறுதி கூறுங்கள். அடுத்த வருடம் என்னுடன் 30 பேர் அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பார்கள். இதே விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுக்கும் நான் வேண்டுகோள் வைத்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை' என்று தெரிவித்தாள்.

சிறுமி கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்ட அமைச்சர் ஆஞ்சநேயா, 'நீ கூறிய விஷயங்கள் தொடர்பாக எல்லா வசதிகளும் அரசுக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நீ போய் பார்த்து சேர்ந்து கொள்ளலாம்.' என்று தெரிவித்தார்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய நயனா, ' நான் வெளிப்படையாக சவால் விடுகிறேன்.ஏதாவது கன்னட ஆதரவு அமைப்புகளோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களோ தங்களது பிள்ளைகளை அரசுக் கல்லூரிகளில் சேர்க்கத் தயாரா? முதலில் நமது தலைவர்கள் அரசு கல்லூரிகளில் முறையான வசதிகளைஉண்டாக்கட்டும்; பின்னர் தங்கள் குழநதைகளை அங்கு படிக்க அனுப்பட்டும். நானும் ஆங்கில கல்வியை விட்டு விட்டு அரசுக் கல்லூரியில் சேர்ந்து விடுகிறேன்' என்று தெரிவித்தாள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com