பதில்களுக்கு பதில் காலி இடங்கள்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கிய தில்லி அரசாங்கம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க அனுப்பிய கடிதத்தில், தில்லி அரசாங்கம் பதில்களுக்குப் பதிலாக வெற்றிடங்களுடன் அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது
பதில்களுக்கு பதில் காலி இடங்கள்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கிய தில்லி அரசாங்கம்!

புதுதில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க அனுப்பிய கடிதத்தில், தில்லி அரசாங்கம் பதில்களுக்குப் பதிலாக வெற்றிடங்களுடன் அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தில்லியைச் சேர்ந்த 'சண்டே ஸ்டாண்டர்ட்' என்னும் பத்திரிக்கையானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தில்லி துணை மண்டல நீதிபதி அலுவலகத்திற்கு மனு ஒன்றினை அனுப்பி வைத்தது. அதில் பணியில் இருக்கும் பொழுதே உயிரிழந்த காவல்துறையினரின் வாரிசுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு  அனுப்பப்பட்டிருந்த பதில்தான் தற்பொழுது சர்ச்சையினை உண்டாக்கியிருக்கிறது. அதில் 'மேற்கொண்டு தகவல் தர முடியாது, ஏன் என்றால்' என்று தொடங்கி அதற்குப்பிறகு ஒன்றும் தகவல் இல்லை. வெறும் வெற்றிடங்கள் மட்டும்தான்  . எல்லா விதமான பதில்களும் இப்படித்தான் காணப்பட்டிருக்கின்றன.

அதே போல் இந்த செய்தித்தாள் அனுப்பிய மற்றொரு கேள்விக்குப் பதிலாக  அனுப்பப்பட்ட கடிதத்திற்கு உறை கூட இணைக்கப்படவில்லை.அதன் மேல் இடப்பட்ட அஞ்சல் முத்திரைகளாலும், மோசமாக கையாண்ட தன்மையினாலும் அது படிப்பதற்கு ஏற்றதாக அமையவில்லை.

தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலைப் பொறுத்த அளவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கா விட்டால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் நீதித்துறை சார்ந்த அலுவலகம் ஒன்றே இவ்வாறு அக்கறை இன்றி செயல்படுவது கடும் விமர்சனத்துக்குளாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள் சரியாக கையாளப்படுவதில்லை என்ற புகார்களைத் தாங்கிய மின்னஞ்சல்கள் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்து அனுப்பபடுவதாகவும், அதனை சரியாக  கையாளதோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் துறை சார் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆறு மாதங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரும் மனுக்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் அவர்கள். அதே நேரம் பணியாளர் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களினால் சரியாக பதில் அனுப்ப முடிவதில்லை என்றும் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com