செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம்

செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம்

செல்போன் திருட்டுக்களைத் தடுக்கும் வகையில், செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.


புது தில்லி: செல்போன் திருட்டுக்களைத் தடுக்கும் வகையில், செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

திருடுப்போகும் செல்போன் எண்களின் ஐஎம்இஐ எண்களை மாற்றி, விற்பனை செய்வதைத் தடுக்கவே மத்திய தொலைத் தொடர்புத் துறை இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

ஒரு தனி நபர், ஆதாயத்துக்காக - செல்போன் உற்பத்தியாளர்களைத் தவிர்த்து - செல்போனின் அடையாள எண் எனப்படும் ஐஎம்இஐ-ஐ மாற்றினாலோ, அழித்தாலோ அது சட்டவிரோதம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிட்டிருக்கும் அரசாணை தெரிவிக்கிறது.

செல்போன் சாதனங்களின் தனி அடையாள எண்ணை திருத்துவதை தடை செய்யும் சட்டம் 2017 என்று  அழைக்கப்படுகிறது. செல்போனின் தனி அடையாள எண்ணை தெரிந்தே ஒருவர் மாற்றுவது, அதற்கான மென்பொருளைப் பயன்படுத்தி ஐஎம்இஐ எண்ணை திருத்துவது போன்ற செயல்களை இந்த சட்டம் தடை செய்கிறது.

இந்த சட்டம், தொலைத்தொடர்பு இணைப்பு, சாதனங்கள், அது தொடர்பான சாதனங்களில் ஐஎம்இஐ எண்ணைத் திருத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்கிறது.

இது மட்டுமல்லாமல், திருடுப் போகும் செல்போன்களை முற்றிலும் செயலிழக்க வைக்கும் நவீன தொழில்நுட்பத்தையும் தொலைத்தொடர்புத் துறை ஆய்வில் வைத்துள்ளது. திருடுப் போகும் செல்போனில், சிம் கார்டு இல்லாமல் இருந்தாலும் அதனை தொழில்நுட்ப உதவியோடு முற்றிலும் செயலிழக்கச் செய்வது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.

செல்போன் திருட்டுச் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதாவது, ஒவ்வொரு செல்போனிலும் ஐஎம்இஐ என்ற தனி அடையாள எண் இருக்கும். இரண்டு சிம்கார்டுகளைக் கொண்ட செல்போனுக்கு இரண்டு ஐஎம்இஐ எண் இருக்கும். ஒருவர் ஒரு செல்போனில் இருந்து மற்றவரை தொடர்பு கொள்ளும் போது, அந்த நபரின் செல்போன் எண்ணுடன், அவர் வைத்திருக்கும் செல்போனின் ஐஎம்இஐ எண்ணும் பதிவாகும். ஒருவர் எந்த செல்போனில் இருந்து யாருடன் பேசியுள்ளார் என்பதை கண்டறிந்து கொள்ளலாம்.

செல்போனில் சிம்கார்டை வேண்டுமானால் எளிதாக மாற்றலாம். ஆனால் ஐஎம்இஐ எண்ணை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது. அதற்கான தொழில்நுட்பம் தெரிந்த நபர்கள் மென்பொருள் வைத்துத்தான் மாற்ற முடியும்.

ஜிஎஸ்எம்ஏ எனப்படும் க்ளோபல் இன்டஸ்ட்ரி அமைப்பினால் இந்த ஐஎம்இஐ எண் வழங்கப்படுகிறது. எனவேதான் செல்போன் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கும் போது அந்த செல்பொனின் ஐஎம்இஐ எண் கேட்கப்படுகிறது. அதைக் கொண்டு காணாமல் போன செல்போனை டிராக் செய்யலாம்.

ஆனால், திருடும் செல்போனின் ஐஎம்இஐ எண்ணையே மாற்றிவிடுவதால், அதனை கண்டுபிடிப்பது என்பது முடியாத காரியமாகிவிடுகிறது. இதில், போலியான ஐஎம்இ எண்களைக் கண்டுபிடிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.

இப்படி போலி ஐஎம்இஐ எண்கள் பயன்படுத்துவது தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை நடத்திய ஒரு ஆய்வில், சுமார் 18 ஆயிரம் செல்போன்கள், ஒரே ஐஎம்இஐ எண்ணுடன் செயல்படுகிறது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com