இந்திய - சீன எல்லைக்கு செப்.28-இல் ராஜ்நாத் சிங் பயணம்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதிக்கு, வரும் 28-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்திய - சீன எல்லைக்கு செப்.28-இல் ராஜ்நாத் சிங் பயணம்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதிக்கு, வரும் 28-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
உத்தரகண்ட் மாநிம், சாமோலி மாவட்டத்தில் உள்ள பாராஹோட்டி பகுதியில், சீன ராணுவத்தினர் கடந்த ஜூலை 25-ஆம் தேதி அத்துமீறி நுழைந்து, அங்கு சில நாள்கள் முகாமிட்டிருந்து, திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாராஹோட்டி பகுதிக்கு ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
சிக்கிம் எல்லையில் உள்ள டோக்காலாம் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர்ப்பதற்றம் முடிவுக்கு வந்த பிறகு, ராஜ்நாத் சிங், சீன எல்லைக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ராஜ்நாத் சிங், தனது பயணத்தின் முதல் நாளன்று முசெளரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதெமிக்குச் சென்று, அங்கு பயிற்சி பெற்று வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார். பின்னர், மத்திய அரசின் கூடுதல் செயலர் நிலையிலான அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இந்தப் பயணத்தின்போது, பாராஹோட்டியில் கடல் மட்டத்தில் இருந்து 14,311 அடி உயரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைச் சந்தித்து ராஜ்நாத் சிங் கலந்துரையாடுகிறார்.
மேலும், 3,488 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய-சீன எல்லையின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
இந்திய-சீன எல்லை இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மலைப் பகுதியாகவும், அடந்த வனப்பகுதியாகவும் இருப்பதால் எல்லைப் பகுதியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியவில்லை. இந்தக் குறைகளைக் களைவதற்கு எல்லைப் பகுதியில் 73 சாலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவற்றில் ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், ரூ.1,937 கோடி செலவில் 804.93 கி.மீ. தொலைவுக்கு 27 சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com