மக்களின் கருத்துகளையே எதிரொலிக்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி

"மனதின் குரல்' (மன்கி பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் எனது கருத்துகளைத் தெரிவிக்கவில்லை; மக்களின் எண்ணங்களைத்தான் பிரதிபலித்து வருகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மக்களின் கருத்துகளையே எதிரொலிக்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி

"மனதின் குரல்' (மன்கி பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் எனது கருத்துகளைத் தெரிவிக்கவில்லை; மக்களின் எண்ணங்களைத்தான் பிரதிபலித்து வருகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மாதம்தோறும் பொதுமக்களுக்கு வானொலியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சி வாயிலாக தனது கருத்துகளை மக்களிடம் மோடி திணித்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியதாவது:
நமது நாட்டு மக்களின் நேர்மறையான எண்ணங்களின் வெளிப்பாடாகவே மனதின் குரல் நிகழ்ச்சி ஒலித்து வருகிறது. நாட்டு மக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பாகவே இந்த நிகழ்ச்சியைக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சி தொடர்பான கருத்துகளையும், தங்கள் எண்ணங்களையும், குற்றம், குறைகளையும் பொதுமக்கள் மின்னஞ்சல், தொலைபேசி, மை ஜிஓவி செயலி, நரேந்திர மோடி செயலி உள்ளிட்ட பல வழிகளில் என்னுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களின் எண்ணங்களைதான் இந்த நிகழ்ச்சி மூலம் நான் பேசி வருகிறேன். எனது கருத்தை மட்டும் பேசிக் கொண்டிருக்கவில்லை.
மக்களின் கருத்துகள்: இந்த நிகழ்ச்சி தொடர்பாக நாடு முழுவதும் இருந்து ஏராளமான ஆலோசனைகள் வந்து குவிகின்றன. எனினும் அரை மணி நேரம் மட்டுமே இருப்பதால் அவை அனைத்தையும் இதில் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. எனினும், மக்களின் கருத்துகள் என்னை தொடர்ந்து மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளன. சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் சிலர் புகார் தெரிவிக்கின்றனர். சிலர் பொது விஷயத்தில் எனது கவனத்தை ஈர்க்கும் வகையில் கருத்து கூறி வருகின்றனர். இதனால் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் என்னால் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
தூய்மையே சேவை: பூமி தான இயக்கத்தை தொடங்கிய ஆச்சார்யா வினோபா பாவேவின் போதனைகளை எப்போதும் நான் மனதில் வைத்துள்ளேன். அரசியல் எப்போதும் திறன்வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நான் நாட்டு மக்களை எனது மனதில் முதன்மையான நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறேன். இதில் எவ்வித அரசியலுக்கும் நான் இடம் கொடுக்கவில்லை. இந்த நிகழ்ச்சி மூலம் திடமான மனதுடன் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
கடந்த முறை வானொலியில் உரையாற்றியபோது தூய்மையே சேவை திட்டம் குறித்துப் பேசியிருந்தேன். அத்திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெற்றிகரமாகத் தொடங்கி வைத்துள்ளார். விளையாட்டுத் துறை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், கல்வியாளர்கள், ராணுவ அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், கல்லூரி, பள்ளிகள் என பலதரப்பட்டவர்களும் அத்திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த பிரசாரத்தில் ஊடகங்களும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.
ஸ்ரீநகர் அருகே ஏரியில் தூக்கி வீசப்படும் பாட்டில்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தூய்மைப்படுத்தி வரும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள பிலால் தாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வீரப் பெண்மணிகள்: ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் மகாதிக்கின் மனைவி ஸ்வாதி மகாதிக், ராணுவ வீரர் நாயக் முகேஷ் துபேயின் மனைவி நித்தி துபே ஆகியோர் ராணுவத்தில் இணைந்துள்ளதை வாழ்த்திய மோடி, "அந்த இரு வீரப் பெண்மணிகளையும் நாட்டு மக்கள் மதித்துப் பாராட்டுவது இயல்பான ஒன்று. இரு சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் நாட்டு மக்கள் மத்தியில் புதிய தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர்.
வாழ்வின் நோக்கம்: மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், லால் பகதூர் சாஸ்திரி, ஜெயப்பிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த தினம் அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சிறந்த தலைவர்கள் அனைவருக்கும் இடையே ஒரு சிறந்த ஒற்றுமை உள்ளது. 
நாட்டுக்காக வாழ்வதும், நாட்டுக்கு நல்லது செய்வதும்தான் அவர்களின் வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது. அதனை அவர்கள் நிரூபித்தும் உள்ளனர். அக்டோபர் 31}ஆம் தேதி சர்தார் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு "ஒரே பாரதம், தலை சிறந்த பாரதம்' என்ற தலைப்பிலான ஒற்றுமை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினமும் அடுத்த மாதம் வருகிறது. அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.
காதிக்கு கை கொடுங்கள்: காதி துணிகளை வாங்கினால் இந்த தீபாவளியில் ஒரு ஏழையின் வீட்டில் நீங்கள் விளக்கேற்றலாம். அனைத்துத் துணிகளையும் காதியில் வாங்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு வரும் சிறு கைக்குட்டை முதல் படுக்கை விரிப்பு வரை ஏதாவது ஒன்றை காதியில் வாங்கிப் பயன்படுத்தினால், ஏராளமான ஏழைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும். காதி என்பது வெறும் துணியல்ல, அது ஒரு லட்சியம். நமது பாரம்பரியமும் கூட. காதியில் பல புதிய தொழில்நுட்பங்களை மத்திய அரசு புகுத்தியுள்ளது.
உள்நாட்டில் சுற்றுலா: வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக் கொள்ளாமல், நமது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொண்டு நமது நாட்டின் பன்முகத்தன்மையையும், கலாசாரத்தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும். 2022}ஆம் ஆண்டு வரைக்குமான செயல் திட்டங்களை மத்திய அரசு வடிவமைத்துள்ளது. நாம் 75}ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது நமது சுதந்திரப் போரட்ட வீரர்கள் கண்ட கனவுகளும், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளும் நினைவாக்க வேண்டும் என்றார் மோடி.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி கடந்த 2014}ஆம் ஆண்டு அக்டோபர் 2}ஆம் தேதி தொடங்கப்பட்டது. 
இப்போது 36 ஆவது முறையாக வானொலியில் மோடி உரையாற்றியுள்ளார். வானொலி உரை நிகழ்ச்சியைத் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com