தமிழகத்துக்கு குறைந்த அளவு காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோர கர்நாடகம் முடிவு

தமிழகத்திற்கு காவிரியில் குறைந்த அளவு நீரைத் திறந்து விட அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் கோர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் குறைந்த அளவு நீரைத் திறந்து விட அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் கோர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக அரசு, காவிரி நதியில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரைத் திறந்து விட வேண்டும் என்று காவிரி நதிநீர் தீர்ப்பாயம் கடந்த 2007இல் உத்தரவிட்டது. 
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் தரப்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏனெனில், தீர்ப்பாயத்தின் உத்தரவு பாரபட்சமாக இருப்பதாக கர்நாடகம் கூறி வருகிறது. 
காவிரி நீர்த் தேக்கப் பகுதியில் போதிய அளவு நீர் இல்லாத காரணத்தால் அந்த உத்தரவை அமல்படுத்த முடியாது என்பது அந்த மாநிலத்தின் வாதமாகும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலம் முன்வைக்க வேண்டிய பதில் தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ்.நாரிமனுடன் தில்லியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி நீர் தொடர்பான உத்தரவால் கர்நாடகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். 
குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைக்கான நீரின்றி பற்றாக்குறையைச் சந்தித்து வரும் நாங்கள், கர்நாடகத்துக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய இறுதித் தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்துக்கு 192 டிஎம்சிக்குப் பதிலாக 100 முதல் 102 டிஎம்சி வரை நீரைத் திறக்க அனுமதிக்குமாறு கோர உள்ளோம். உச்ச நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறது என்று பார்ப்போம். இந்த விவகாரத்தில் எங்கள் தரப்பு சமர்ப்பிக்க வேண்டிய பதில் மனு இறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.
தமிழகத்துக்கு குறைந்த அளவு நீரைத் திறக்க அனுமதிக்குமாறு கோருவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்ப்பது உள்ளிட்ட 9 முக்கிய அம்சங்கள் அந்த பதில் மனுவில் இடம்பெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com