பனாரஸ் பல்கலை.யில் போலீஸார் தடியடி: உ.பி. தலைமைச் செயலர் தலைமையில் விசாரணைக் குழு

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியிலுள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் 'ஈவ்-டீசிங்குக்கு' எதிரான மாணவர் போராட்டத்தின்போது போலீஸார் தடியடி நிகழ்த்தியது

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியிலுள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் 'ஈவ்-டீசிங்குக்கு' எதிரான மாணவர் போராட்டத்தின்போது போலீஸார் தடியடி நிகழ்த்தியது குறித்து விசாரிக்க, அந்த மாநிலத்தின் தலைமைச் செயலர் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில ஆளுநர் ராம் நாயக் திங்கள்கிழமை கூறியதாவது: 
பனாரஸ் பல்கலைக்கழக வன்முறை குறித்து விசாரிக்க, மாநில தலைமைச் செயலர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு, மாணவர் போராட்டத்தின்போது போலீஸார் நடந்துகொண்ட விதம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தும். விசாரணையின் முடிவில் அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின்
அடிப்படையில், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
ஏற்கெனவே, பனாரஸ் பல்கலைக்கழக வன்முறைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வரும் வியாழக்கிழமை (செப். 28) முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பண்டிகைக் கால விடுமுறை, செவ்வாய்க்கிழமையிலிருந்தே (செப். 26) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1,000 மாணவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்: இதற்கிடையே, போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 1,000 மாணவர்களுக்கு எதிராக வாராணசியில் உள்ள லங்கா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மீது அத்துமீறித் தாக்குதல் நிகழ்த்தியதாக அடையாளம் குறிப்பிடாத போலீஸார் மீதும் தனி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நீக்கம்: இதுதவிர, இந்தச் சம்பவம் தொடர்பாக மனோஜ் குமார் சிங், சுஷீல் குமார் கெளண்ட், ஜகதம்மா பிரசாத் ஆகிய 3 கூடுதல் ஆட்சியர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வாராணசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேல்பூர் சரக அலுவலர் நிவேஷ் கட்டியார், லங்கா காவல் நிலைய அதிகாரி கோட்வாலி அயோத்ய பிரசாத் ஆகியோர் பணிமாற்றம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கண்டனம் தெரிவித்து, பல்கலைக்கழக மாணவர்கள் வளாகத்தின் முக்கிய வாயில் அருகே கடந்த வியாழக்கிழமை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பல்கலைக்கழக துணை வேந்தரைச் சந்திக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் சனிக்கிழமை வலியுறுத்தினர். எனினும், பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸார், வன்முறையைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்தனர். இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட ஏராளமான மாணவர்களும், போலீஸாரும் காயமடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com