பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா?: காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸின் வாரிசு அரசியல் குறித்து விமர்சிப்பதற்கு முன்பு, பாஜகவில் அந்த முறை இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா?: காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸின் வாரிசு அரசியல் குறித்து விமர்சிப்பதற்கு முன்பு, பாஜகவில் அந்த முறை இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர், வாரிசு அரசியலையும், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலையும் நம்பியே காங்கிரஸ் இருப்பதாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அமித் ஷாவின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாக அமித் ஷா விமர்சித்திருக்கிறார். ஒருவரைக் குறைகூறும் முன்பு, முதலில் தாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். பாஜகவில் காலம் காலமாக வாரிசு அரசியல் என்பது நிலவி வருகிறது. இதனை அமித் ஷாவால் மறுக்க முடியுமா?
பாஜகவில் வாரிசு அரசியலே இல்லையென்றால், பாஜக மூத்த தலைவர்கள் பிரேம் குமார் துமல், வசுந்தரா ராஜே, ரமண் சிங் ஆகியோரது மகன்கள் நாடாளுமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
அதேபோல், காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை முன்னெடுப்பதாகவும் அமித் ஷா கூறியுள்ளார். சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என என்றைக்குமே காங்கிரஸ் பிரித்துப் பார்த்தது கிடையாது. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைவது என்பது பாஜகவின் தந்திரமாகும்.
அதன் காரணமாகதான், பாஜக ஆட்சியில் இருந்த இந்த மூன்றரை ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்புக் கலவரங்கள் நாட்டில் நடைபெற்றன. தற்போது நடைபெற்றும் வருகின்றன. காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் எங்கேனும் ஒரு வகுப்புக் கலவரமாவது நடந்ததாக கூற முடியுமா?
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம், உள்நாட்டு பாதுகாப்பு, பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைந்துள்ளார். முக்கியமாக, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, தாம் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட மோடி நிறைவேற்றவில்லை.
தாம் ஆட்சியில் இருந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டை நிர்வகிப்பது எப்படி என்று தமக்கு தெரியவில்லை என்று மோடியே தெளிவுபடுத்திவிட்டார். இன்னும் மீதமிருக்கும் ஒன்றரை ஆண்டுகளில், நாட்டை வழிநடத்தும் எந்தத் திட்டமும், வியூகமும் பாஜகவிடம் இல்லை. எனவே, அவர்கள் நாட்டில் மதக் கலவரங்களையும், வகுப்புக் கலவரங்களையுமே ஏற்படுத்த முயற்சிப்பார்கள். எனவே, இந்த விஷயத்தில் நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அந்தப் பதிவில் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com