2020-ஆம் ஆண்டில் 5ஜி தொழில்நுட்பம்: மத்திய அரசு முடிவு

இந்தியாவில் வரும் 2020-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதலுக்காக

இந்தியாவில் வரும் 2020-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதலுக்காக உயர்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா இது தொடர்பாகக் கூறியதாவது:
5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் நகர்ப்புறங்களில் பிராட்பேண்ட் சேவையின் வேகம் 10,000 எம்பிபிஎஸ் ஆகவும், கிராமப்புறங்களில் 1,000 எம்பிபிஎஸ் ஆகவும் இருக்கும். இதற்காக மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. 
இத்திட்டத்தை செயல்படுத்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருண் சுந்தர்ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் குமார், அறிவியல்-தொழில்நுட்பத் துறை செயலாளர் அஷுதோஷ் சர்மா உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. நமது நாட்டில் பயன்படுத்தப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகளில் உள்நாட்டுத் தயாரிப்புகள் 50 சதவீதம் இருக்க வேண்டும். சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் 5ஜி கருவிகளில் இந்தியத் தயாரிப்புகள் 10 சதவீதம் இருக்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு, பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும்.
5ஜி தொழில்நுட்பத்தில் சிக்கல் வாய்ந்த மருத்துவக் கருவிகள், ஓட்டுநர்கள் இல்லாமல் இயங்கக் கூடிய கார் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும். 5ஜி கருவிகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com