பயங்கரவாதத்தைத் தூண்டுபவர்கள் மீது பொருளாதாரத் தடை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டும் சக்திகள் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தைத் தூண்டுபவர்கள் மீது பொருளாதாரத் தடை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டும் சக்திகள் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆப்கன் விவகாரம் தொடர்பான பொது விவாதத்தின்போது, பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் பேசியதாவது:
பயங்கரவாதிகளிடையே நல்ல பயங்கரவாதிகள், கெட்ட பயங்கரவாதிகள் என்று நாம் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. ஒரு பயங்கரவாதக் குழுவோடு மோத, மற்றொரு பயங்கரவாதக் குழுவுக்கு உதவியளிக்கவும் கூடாது.
தலிபான், ஹக்கானி அமைப்பு, அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.), லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது மற்றும் இவற்றைப் போன்ற பிற அமைப்புகள் அனைத்தும் பயங்கரவாத அமைப்புகளே. இவற்றில் பெரும்பாலான அமைப்புகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விவகாரத்தில் உலக நாடுகள் இனியும் மெளனம் காக்கக் கூடாது. பயங்கரவாதத்தை வேரறுப்பதே சர்வதேச சமுதாயத்தின் முதல் மற்றும் முக்கியக் கடமையாக இருக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் சர்வதேச நாடுகளும், அந்த நாட்டு மக்களும் அரும்பாடுபட்டு கொண்டு வந்த முன்னேற்றங்கள் வீணாகி வருகிறது. அங்கு பாதுகாப்பு நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், இறுதி ஊர்வலங்கள், சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் போன்றவை கூட பயங்கரவாதிகளால் குறிவைக்கப்படுவது மிகவும் கவலையை அளிக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சட்டவிரோதமான முறையில் நிதியுதவி அளிக்கப்படுவதற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக, 1988-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பயங்கரவாத நிதியளிப்புக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com