ரோஹிங்கயா இனத்தவருக்கு அடைக்கலம்: வருண் காந்தி கருத்துக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

ரோஹிங்கயா இனத்தவருக்கு இந்தியாவில் அடைக்கலம் அளிக்க வேண்டும் என்று கருத்து கூறிய பாஜக எம்.பி. வருண் காந்திக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர்  கண்டனம்
ரோஹிங்கயா இனத்தவருக்கு அடைக்கலம்: வருண் காந்தி கருத்துக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

ரோஹிங்கயா இனத்தவருக்கு இந்தியாவில் அடைக்கலம் அளிக்க வேண்டும் என்று கருத்து கூறிய பாஜக எம்.பி. வருண் காந்திக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் (படம்) கண்டனம் தெரிவித்துள்ளார்.
வருண் காந்தி, ஹிந்தி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் 'ரோஹிங்கயயா இனத்தவருக்கு இந்தியா அடைக்கலம் தர வேண்டும். ஆனால், அதற்கு முன்பாக உண்மையான பாதுகாப்பு கவலைகள் சார்ந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஹீர், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில் 'தேசிய நலனை மனதில் கொண்டுள்ள யாரும் இது போன்ற கருத்தைத் தெரிவிக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார். 
அமைச்சரின் இந்தக் கருத்து குறித்து வருண் காந்தி, சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
அண்மையில் நான் எழுதிய கட்டுரையானது, அகதிகள் குறித்த இந்தியாவின் கொள்கையை வரையறுப்பது குறித்தும், நாம் அகதிகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்பது குறித்தும்தான் சுட்டிக்காட்டியது.
ரோஹிங்கயா அகதிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு கருணை காட்டப்பட வேண்டும் என்றும் அடைக்கலம் தரப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தேன். அடைக்கலம் கோரி விண்ணப்பிக்கும் அதேவேளையில் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் விண்ணப்பதையும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வருண் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக செயற்குழு திங்கள்கிழமை நிறைவேற்றிய தீர்மானத்தில் ரோஹிங்கயா அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை ஆதரிப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. 'மத்திய அரசு, வங்கதேசத்தில் தங்கியுள்ள ரோஹிங்கயா அகதிகளுக்கு மனிதாபிமான நிவாரணப் பொருள்களை வழங்கியதன் மூலம் தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது.அதேவேளையில், தனது 125 கோடி குடிமக்களுக்காக, உள்நாட்டுப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளப்படாததையும் உறுதிப்படுத்தியது' என்று அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் கூறுகையில், 'இந்தியாவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ள ரோஹிங்கயா பிரிவினர் அகதிகள் அல்ல. சட்டவிரோதமாக நம் நாட்டில் குடியேறியுள்ள அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com