இந்தியாவுடனான உறவு பருவகால மழை போன்றது: சீனா கருத்து

இந்தியாவுடனான உறவு பருவகாலத்தில் பொழியும் மழை போல ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்டு வருகிறது என்று சீன துணைத் தூதர் ஜேங் ஜியூவான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான உறவு பருவகாலத்தில் பொழியும் மழை போல ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்டு வருகிறது என்று சீன துணைத் தூதர் ஜேங் ஜியூவான் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் இரு நாடுகளுக்குமான உறவு கருமேகம் சூழ்ந்ததைப் போல காட்சியளிக்கிறது என்று டோக்கா லாம் விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.
மக்கள் குடியரசு நாடாக சீனா அறிவிக்கப்பட்டு 69 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சி மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற சீனத் துணைத் தூதர் ஜியூவான், இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பூடானுக்குச் சொந்தமான எல்லைப் பகுதியான டோக்கா லாமில் அத்துமீறி சாலை அமைத்து வரும் சீனப் படைகள், அப்பகுதிக்குள் ஊடுருவுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் சிக்கிம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி அண்மையில் நுழைந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையே போர்ச் சூழல் எழுந்தது. இதையடுத்து இரு நாடுகளும் ராஜீய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக அந்தப் பதற்றம் தணிந்தது. இதற்கு நடுவே, சீனாவின் பெய்ஜிங் நகரில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியும், அந்நாட்டுப் பிரதமர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். இது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த விரிசலுக்குத் தீர்வு காணும் முதல்கட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில், மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜியூவான், இதுதொடர்பாக பேசியதாவது:
டோக்கா லாம் பிரச்னை தீவிரமாக இருந்தபோது எனக்கும், எனது மனைவிக்கும் இந்திய நண்பர்களின் குடும்ப விழாக்களில் பங்கேற்க அழைப்புகள் வந்தன. 
இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் நீடிக்கும் தருணத்தில் அத்தகைய விழாக்களில் பங்கேற்றால் முறையான வரவேற்பு கிடைக்குமா என்ற ஐயம் எங்களுக்கு இருந்தது. ஆனால், அதனைப் பொய்யாக்கும் விதமாக மிகச் சிறந்த விருந்தோம்பலையே நாங்கள் எதிர்கொண்டோம். இந்தியா - சீனா இடையேயான உறவு பருவ காலத்தில் பொழியும் மழை போன்றது. ஆண்டுக்கு ஆண்டு அது மாறுபடும். சில நேரங்களில் வெறும் கரு மேகம் மட்டும் சூழ்ந்திருக்கும். அந்த உறவில் நெருக்கங்களும், விரிசல்களும் மாறி மாறி இருந்தாலும், இரு நாடுகளும் இணைந்து முன்னேற்றத்தை நோக்கி பயணித்து வருகின்றன என்பதில் மாற்றமில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com