குஜராத்: மலைக்கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு

குஜராத் மாநிலம் சோடிலாவில் அமைந்துள்ள மலைக்கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
குஜராத் மாநிலம் சோடிலா நகரில் மலை மீது அமைந்துள்ள சாமுண்டா அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. நாள்: புதன்கிழமை.
குஜராத் மாநிலம் சோடிலா நகரில் மலை மீது அமைந்துள்ள சாமுண்டா அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. நாள்: புதன்கிழமை.

குஜராத் மாநிலம் சோடிலாவில் அமைந்துள்ள மலைக்கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்துத்துவ நிலைப்பாட்டுக்கு பதிலடி கொடுப்பதே இதன் நோக்கம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
குஜராத்தில் ராகுல் காந்தி மூன்று நாள் பிரசார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். முதல் நாளன்று துவாரகை நகரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் அவர் வழிபட்டார். அதன் பின் பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட பேருந்து மூலம் சாலை மார்க்கமாக பயணித்து கிராம மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார்.
அதன் நிறைவு நாளான புதன்கிழமை, சோடிலா நகரில் அவர் மக்களிடையே பேசினார். இதனிடையே, அங்கு மலை உச்சியில் அமைந்துள்ள சாமுண்டா அம்மன் கோயிலுக்கு அவர் 15 நிமிடங்களில் சுமார் 1,000 படிகள் ஏறி வந்து, தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோயிலின் முக்கியத்துவம் குறித்து அர்ச்சகர்கள் எடுத்துக் கூறினர். அதைத் தொடர்ந்து ராகுல், மலையில் இருந்து படிகள் வழியாக 15 நிமிடங்களில் இறங்கினார். 
மாலையில், காக்வாத் கிராமத்தில் உள்ள கோதால் தாம் கோயிலுக்கு ராகுல் வந்தார். அங்கு படேல் சமூகத்தினரின் குலதெய்வமான கோடியார் மாதா அம்மனை அவர் வழிபட்டார். படேல் சமூகத்தின் ஒரு பகுதியினர் தங்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி மாநில பாஜக அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இதனிடையே, காக்வாத் கிராமத்துக்கு ராகுல் வந்தபோது அங்கு திரண்டிருத படேல் சமூகத்தினர் முழக்கங்களை எழுப்பி அவரை வரவேற்றனர். அங்கிருந்து அவர் ஜேத்பூர் நோக்கிச் சென்றபோது வழியில் உள்ள, தலித்துகள் மற்றும் புத்த மதத்தினர் போற்றி வணங்கும் தசி ஜீவன் கோயிலில் தரிசனம் செய்தார்.
அதேபோல், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள வீர்பூர் பகுதியில் ராகுலின் பிரசாரப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று வண்டியை நிறுத்தச்சொன்ன அவர், அங்குள்ள ஜலாராம் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தில்லியில் கூறுகையில் 'ராகுல் பல்வேறு கோயில்களில் வழிபாடு மேற்கொண்டதில் அரசியல் ஆதாய நோக்கம் ஏதுமில்லை. ஒவ்வொருவருக்கும் தத்தமது மதத்தைக் கடைப்பிடிக்கும் உரிமை உண்டு என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளோம்' என்றார்.
எனினும், இது தொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்துத்துவ நிலைப்பாட்டுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே ராகுல்,
கோயில்களில் வழிபாடு மேற்கொண்டுள்ளார். இந்த அமைப்புகள் காங்கிரஸ் கட்சியை ஹிந்து விரோதக் கட்சி என்று சித்திரிக்கின்றன. அது உண்மையான கருத்து அல்ல' என்றார்.
இதனிடையே, ராகுல் காந்தி பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துள்ளது குறித்து குஜராத் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜு துருவ் கருத்து கூறியுள்ளார். 'எந்த மாநிலத்திலும் தனது கட்சி (காங்கிரஸ்) தேர்தல்களில் வெற்றி பெறுவதில்லை என்பதாலேயே ராகுல், கோயில் கோயிலாகச் சென்று வருகிறார்' என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com