குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பகமான தலைவர்கள் இல்லை

குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பகமான தலைவர்கள் இல்லை என்று அந்த மாநிலத்தின் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபானி  விமர்சித்துள்ளார்.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பகமான தலைவர்கள் இல்லை

குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பகமான தலைவர்கள் இல்லை என்று அந்த மாநிலத்தின் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபானி  விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து வதோதரா அருகே உள்ள அனந்த் எனுமிடத்தில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தில்லியில் இருந்து குஜராத்துக்கு ராகுல் காந்தி வந்ததன் நோக்கமே, இந்த மாநிலத்தில் காங்கிரஸுக்கு நம்பகமான தலைமை இல்லை என்பதற்காகத்தான். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வலுவானதாகவோ, தொலைநோக்கு கொண்டதாகவோ இருந்திருந்தால், இங்கு ராகுல் வந்திருக்க மாட்டார்.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி முன்வைக்க எந்தப் பிரச்னைகளும் கிடையாது. அதேபோல், மக்களைச் சந்தித்து முக்கிய விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பேசியதும் இல்லை.
குஜராத்தில் நர்மதை ஆற்றின்மீது சர்தார் சரோவர் அணை மிகவும் காலதாமதமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சரோவர் அணையில் நீர்திறப்பு கதவுகளை அமைக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏன் காலதாமதமாக ஒப்புதல் அளித்தது என்பதற்கு ராகுல் பதிலளிக்க வேண்டும்? இந்த ஒப்புதலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலதாமதமாக அளித்ததால், நர்மதையில் இருந்து லட்சக்கணக்கான கன அடி நீர் வீணாகக் கடலில் கலந்துவிட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. இதற்கான காரணத்தை ராகுல் காந்தி விளக்க வேண்டும். நாட்டில் தற்போது நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு காங்கிரஸ்தான் காரணம். கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலும் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான நிர்வாகத்தினாலேயே, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது.
நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு, மத்தியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ் கூட்டணி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்றார் ரூபானி.
முன்னதாக, ஆனந்தில் தேசிய பால்பொருள் மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு ரூபானி விருதுகளை அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com