பனாரஸ் பல்கலை. வன்முறையின் பின்னணியில் சமூக விரோத சக்திகள்

உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறையின் பின்னணியில் சமூக விரோத சக்திகள் இருப்பதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்
பனாரஸ் பல்கலை. வன்முறையின் பின்னணியில் சமூக விரோத சக்திகள்


உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறையின் பின்னணியில் சமூக விரோத சக்திகள் இருப்பதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவதாகவும், இதனைத் தடுக்க நிர்வாகம் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி சில நாள்களுக்கு முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென வன்முறை மூண்டது. இதில் மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் இரு செய்தியாளர்கள் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 1000 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மீது போலீஸார் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கோரக்பூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக கூறியதாவது:
பனாரஸ் பல்கலைக்கழத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த அறிக்கை கிடைத்துள்ளது. அதில், பல்கலைக்கழகத்தில் எந்த மாணவியும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 
சமூக விரோத கும்பலைச் சேர்ந்த சிலர் பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் அமைதியான சூழலைக் கெடுக்க வேண்டுமென்ற நோக்கில் மாணவர்கள் என்ற பெயரில் சிலர் வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகத்தில் வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமூக விரோதிகள் சதி செய்துள்ளதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் நடக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு மாணவர்களுடன் பேச்சு நடத்தி ஆலோசனை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களும், மாணவர்களும் அவ்வப்போது சந்தித்துப் பேசுவதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்கலாம்.
இறுதி அறிக்கை கிடைத்த பிறகு, செய்தியாளர்களைத் தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தேவையற்றது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com