பொருளாதார வீழ்ச்சியை பாஜக மூத்த தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார்: ராகுல் காந்தி

'நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவே ஒப்புக் கொண்டுள்ளார். 
பொருளாதார வீழ்ச்சியை பாஜக மூத்த தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார்: ராகுல் காந்தி

'நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவே ஒப்புக் கொண்டுள்ளார். மக்களின் துன்பங்களை நரேந்திர மோடி அரசு அலட்சியப்படுத்துகிறது' என்று குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
யஷ்வந்த் சின்ஹா, ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவரித்துள்ளார். அதில் 'பொருளாதாரத்துக்கு மத்திய நிதியமைச்சர் ஏற்படுத்தியுள்ள குழப்பம் குறித்து நான் இப்போது கூட பேசவில்லை என்றால் எனது தேசியக் கடமையை செய்யத் தவறி விடுவேன். நாட்டின் பொருளாதார நிலை சீர்கெட்டதற்கு மோடியும், ஜேட்லியும்தான் காரணம்.
இது பற்றி பாஜக தலைவர்கள் பலருக்கும் தெரிந்தாலும், பயம் காரணமாக அவர்கள் வெளியில் பேசுவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி கடந்த மூன்று நாள்களாகப் பிரசார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்தின் நிறைவு நாளான புதன்கிழமை, சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள சோடிலா நகரில் திரண்டிருந்த மக்களிடையே அவர் பேசியது :
பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ள கட்டுரையை நான் வாசித்தேன். மோடியும், ஜேட்லியும் இந்தியப் பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டதாக அவர் எழுதியுள்ளார். இது எனது கருத்து அல்ல. பாஜக தலைவர் ஒருவரின் கருத்து. 
நாட்டின் பொருளாதாரம் தற்போது உச்சகட்ட குழப்பத்தில் உள்ளது. 
இதற்கு, இந்த நாட்டை நடத்திச் செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பெண்கள் மற்றும் சாமானிய மக்களின் குரலை அரசு செவிமடுத்துக் கேட்காததுதான் காரணம். பாஜகவைச் சேர்ந்தவர்கள் பெரு முதலாளிகளின் குரல்களை மட்டுமே கேட்கின்றனர். 
தங்கள் சொந்தக் கருத்துகளை மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் தெரிவிக்கின்றனர் என்றார் ராகுல் காந்தி.
சின்ஹாவுக்கு சிதம்பரம் பாராட்டு: இதனிடையே, பொருளாதாரம் குறித்து உண்மையைப் பேசியதற்காக யஷ்வந்த் சின்ஹாவைப் பாராட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிதம்பரம், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சின்ஹா உண்மையைப் பேசியதும், பொருளாதாரம் குறித்த எங்களது கருத்துகளை எதிரொலித்ததும் மகிழ்ச்சியளிக்கிறது. 
பொருளாதாரத்தில் உள்ள பலவீனங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி கடந்த 18 மாதங்களாகக் கூறி வந்ததையே சின்ஹா தற்போது கட்டுரையாக எழுதியுள்ளார். 
அந்த பலவீனங்களை காங்கிரஸ் சுட்டிக் காட்டியபோது, வாயை மூடும்படி ஆட்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
பொருளாதாரச் சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து மத்திய அரசுக்கு ஒன்றும் புரியவில்லை. பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு அரசே காரணம். இது மக்களைக் கொள்ளையடிப்பதாகும் என்றார் சிதம்பரம்.
யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டுக்குராஜ்நாத் சிங் பதிலடி
பொருளாதார நிலை குறித்து யஷ்வந்த் சின்ஹா கூறிய கருத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தில்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை உலதமே ஒப்புக் கொண்டுள்ளது. இந்த உண்மையை யாரும் மறக்கக் கூடாது. சர்வதேச அரங்கில் பொருளாதார விவகாரத்தில் இந்தியாவின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது என்று ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com