மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்

இந்திய-மியான்மர் எல்லையில் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்- கப்லாங் (என்எஸ்சிஎன்-கே) பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் புதன்கிழமை அதிகாலை அதிரடித் தாக்குதல் நடத்தியது.
மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்

இந்திய-மியான்மர் எல்லையில் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்- கப்லாங் (என்எஸ்சிஎன்-கே) பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் புதன்கிழமை அதிகாலை அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, மியான்மர் எல்லையில் புகுந்து ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது என்று தகவல் வெளியானது. ஆனால், இதை ராணுவம் மறுத்துள்ளது.
ராணுவம் அறிக்கை: நாகா பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவத்தின் கிழக்குப் பிரிவு தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் என்எஸ்சிஎன்-கே பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும், உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. ராணுவத் தரப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துல்லியத் தாக்குதல் நடத்தவில்லை: இந்தத் தாக்குதலின்போது சர்வதேச எல்லையைக் கடந்து வீரர்கள் செல்லவில்லை என்றும், இது துல்லியத் தாக்குதல் இல்லை என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் மீது ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியதுபோல, மியான்மரிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை ராணுவம் மறுத்துள்ளது.
ராஜ்நாத் சிங் பதில்: நாகா பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
மியான்மர் நமது நட்பு நாடு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இது தொடர்பாக மேலும் விவரங்கள் கிடைத்த பிறகு உரிய தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
பயங்கரவாத அமைப்பு விளக்கம்
என்எஸ்சிஎன்-கே அமைப்பின் செய்தித்தொடர்பாளர் என்று கூறப்படும் ஐசக் சுமி இந்தச் சம்பவம் தொடர்பாக முகநூலில் (ஃபேஸ்புக்) பதிவிட்டுள்ளார். அதில், மியான்மரால் ஆக்கிரமிக்கப்பட்ட நாகா தேசத்துக்கு சொந்தமான பகுதியில் உள்ள லாங்கு கிராமத்தில் எங்கள் இயக்கத்தினரின் முகாம் மீது இந்திய ராணுவத்தினர் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தாக்குதல் நடத்தினர். 
இதையடுத்து, நாகா இயக்க வீரர்களும் திருப்பித் தாக்கினர். சில மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். 
பலர் காயமடைந்தனர். நாகா வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தேடப்படும் பயங்கரவாதி: ஐசக் சுமி கூறியுள்ள இடம் இந்திய-மியான்மர் எல்லையில் இருந்து 10 முதல் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் மூலம் மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்தது என்று அவர் மறைமுகமாகக் கூறியுள்ளார். ஐசக் சுமி, தேசியப் புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவராவார். இப்போது, மியான்மரின் யாங்கூன் நகரில் தங்கியிருப்பதாக ஐசக் சுமி கூறியுள்ளார். என்ஐஏ ஆவணங்களில் ஐசக் சுமி நாகாலாந்து மாநிலத்தின் ஜுனேபோத்தோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்பின் பின்னணி
அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா, நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான பயங்கரவாத, பிரிவினைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலும் (என்எஸ்சிஎன்) ஒன்றாகும். 
இந்த அமைப்பில் பிளவு ஏற்பட்டு என்எஸ்சிஎன்-கே உருவானது. இந்தியாவில் இருந்து நாகாலாந்தைப் பிரித்து தனி நாடாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்த பயங்கரவாத அமைப்பு ஆயுதம் ஏந்தி செயல்பட்டு வருகிறது. இதில் 2,000 பயங்கரவாதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பினர், மியான்மரின் வடக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சீனாவும், பாகிஸ்தானும் இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி, ஆயுத உதவி அளித்து வருகின்றன.
முன்னதாக, நாகா பயங்கரவாதிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மியான்மர் எல்லையில் செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com