ரத்த தானத்தை ஊக்குவிக்க முகநூலில் புதிய வசதி!

ரத்த தானம் செய்வதை ஊக்குவிக்கவும், ரத்தம் தேவைப்படுவோர்-ரத்த தானம் செய்வோர் இடையே தொடர்பை ஏற்படுத்தவும் சமூக வலைதளமான முகநூலில் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரத்த தானம் செய்வதை ஊக்குவிக்கவும், ரத்தம் தேவைப்படுவோர்-ரத்த தானம் செய்வோர் இடையே தொடர்பை ஏற்படுத்தவும் சமூக வலைதளமான முகநூலில் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த வசதியை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் முகநூல் நிர்வாகம் இந்தியாவில் நடைமுறைப்படுத்த உள்ளது.
இதுகுறித்து அந்த நிர்வாகத்தின் தெற்காசியப் பிரிவுத் தலைவர் ரித்தேஷ் மேத்தா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
முகநூல் வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்துகொள்ள ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள வசதிகளைப் போல், ரத்த தானம் செய்ய விருப்பம் இருப்பதாகத் தெரிவிக்கும் வசதியும் சேர்க்கப்படவுள்ளது. அதில், தங்களின் ரத்தப் பிரிவு, ஏற்கெனவே ரத்த தானம் செய்திருப்பின் அதைப் பற்றிய விவரங்கள் ஆகியவை கேட்கப்படும்.
அதை விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்து முகநூல் நண்பர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வைத்துக்கொள்ளலாம்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரத்தம் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-ஆப்) போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பிரிவு ரத்தம் தேவை என நண்பர்களிடம் ரத்தம் தேவைப்படுபவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அவர்களுக்காக ரத்த தானம் செய்வோரை எளிதில் தொடர்புகொள்ள இந்த வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் செல்லிடப்பேசிகளில் இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார் ரித்தேஷ் மேத்தா.
முகநூல் இந்தியப் பிரிவு உயரதிகாரி ஹேமா புத்தராஜு கூறியதாவது:
இந்த வசதி முதல்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக, தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ரத்த வங்கிகள், மருத்துவமனைகள் ஆகியவை ரத்த தானம் செய்வோரை முகநூல் மூலம் தொடர்புகொள்ள முடியும். பின்னர், படிப்படியாக அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும்.
குறிப்பிட்ட ரத்தப் பிரிவு ரத்தம் தேவை என முகநூல் மூலம் வேண்டுகோள் விடுப்பவர்களுக்கு அவர்கள் அருகாமையில் உள்ள அந்த ரத்தப் பிரிவு கொண்ட ரத்த தானம் செய்வோர் குறித்த விவரங்கள் செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். பின்னர், அவர்களை ரத்தம் வேண்டுவோர் எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஹேமா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com