எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பான தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம்  மறுப்பு! 

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட  தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்து விட்டது.
எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பான தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம்  மறுப்பு! 

புதுதில்லி: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட  தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்து விட்டது.

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசினை எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே  இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் திங்களன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு மீதான   சீராய்வு மனு விசாரணை, செவ்வாய் மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்தார்.

இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணையின் பொழுது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட  தீர்ப்புக்கு இடைக்கால  தடை விதிக்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்து விட்டது.

முன்னதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் செவ்வாய் காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோயல் மற்றும் பாலி நாரிமன் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு பற்றி முறையிட்டார். அதற்கு நீதிபதி கோயல், இந்த வழக்கு குறித்து முதலில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி லலித் மற்றும் தான் அடங்கிய அமர்வு ஒன்றினை விசாரிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டால், செவ்வாய் மதியம் விசாரிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சீராய்வு மனுவினை நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்தார். அத்துடன் விசாரணை மதியம் 2 மணிக்கு பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கானது நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தீர்ப்பின் காரணமாக நாடு முழுவதும் திங்களன்று பரவலாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதனைச் சுட்டிக் காட்டி, தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள் நாங்கள் அளித்த தீர்ப்பினை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அனைவரும்  வீதிக்கு வந்து போராடுகின்றனர். எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலமாக அப்பாவிகள் சிலரும் பாதிக்கப்படுகின்றனர். அதனைத் தடுப்பதற்காகவே விசாரணை கமிஷன் ஒன்றினை அமைக்க உத்தரவிட்டுளோம்.  அந்த கமிஷனின் விசாரணை முடிவில் புகார் அளிக்கப்பட்டவர் மீது தவறு இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கலாம். 

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டதோடு, வழக்கை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்தனர். அத்துடன் மூல வழக்கில் சம்மந்தப்பட்ட எதிர்  தரப்பினர் இரண்டு நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com