வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் புதிய வசதி: மனுவை பரிசீலிக்க உத்தரவு
By DIN | Published on : 17th April 2018 02:26 AM | அ+அ அ- |
மின்னணு வாக்கு இயந்திரங்களில் வாக்களிக்கும்போது, தாம் விரும்பிய வேட்பாளருக்கு அல்லாமல் தவறாக வேறு நபருக்கு வாக்களித்துவிட்டால், அதனை ரத்து செய்யும் வகையில் புதிய வசதியை வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் ஏற்படுத்தக் கோரும் மனுவை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன், 'யாருக்கு வாக்களித்தோம்?' என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கும்போது, தாம் விரும்பிய வேட்பாளருக்கு அல்லாமல் தவறாக வேறு நபருக்கு வாக்களித்துவிட்டால், அந்த வாக்கை ரத்து செய்யும் வசதியை வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் ஏற்படுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அருண் குமார் என்ற பொறியாளர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளிக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர். அந்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.