அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகள் நீக்கம்

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் யாத்ரீகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த சர்ச்சைக்குரிய கட்டுப்பாட்டை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து விட்டது.

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் யாத்ரீகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த சர்ச்சைக்குரிய கட்டுப்பாட்டை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து விட்டது.
தெற்கு காஷ்மீரில் இமயமலைத் தொடரில், அமர்நாத் குகையில் அமைந்துள்ள பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள், அமைதி காக்க வேண்டும்; பிரசாதங்களை வழங்கக் கூடாது; யாத்ரீகர்கள் பயணிப்பதற்கு கோவேறு கழுதைகளைப் பயன்படுத்தக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி விதித்தது.
இந்த கட்டுப்பாடுகளை அமர்நாத் கோயில் நிர்வாகம் பின்பற்ற உத்தரவிடக் கோரி, கெளரி முலேகி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்நாத் கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, அமர்நாத் கோயில் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மனுவில் எதுவும் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை என்றார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொடர்புடையதாக இல்லை. இந்தக் கட்டுப்பாடுகளை பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்திருக்ககக் கூடாது. எனவே, அந்த கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், அமர்நாத் பகுதியின் சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்பாக, மனுதாரர் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com