உண்ணாவிரதத்தில் பங்கேற்க கட்சியினருக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு

மத்திய அரசு, ஆந்திரத்துக்கு அநீதி இழைத்ததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தான் மேற்கொள்ளும் உண்ணாவிரதத்தில்

மத்திய அரசு, ஆந்திரத்துக்கு அநீதி இழைத்ததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தான் மேற்கொள்ளும் உண்ணாவிரதத்தில் தனது கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து, தனது பிறந்தநாளான ஏப்ரல் 20-இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமராவதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:
மத்திய அரசு ஆந்திரத்துக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதைக் கண்டித்து எனது பிறந்த நாளன வரும் வெள்ளிக்கிழமை விஜயவாடாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருக்கிறேன். அதே நேரத்தில் மாநில அமைச்சர்களும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இது தவிர நமது கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் தொண்டர்களைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டும்.
இது தவிர, ஆந்திரத்தில் நமது அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில் வரும் 21-ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸை விமர்சித்துப் பேசிய சந்திரபாபு நாயுடு, 'போலியான புகைப்படங்கள், போலியான விடியோக்கள், போலியான பிரசாரங்களை எதிர்க்கட்சி மேற்கொண்டு வருகிறது. அவர்கள் கட்சியே போலியானதுதான்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com