கதுவா சம்பவம்: உண்மை கண்டறியும் சோதனை நடத்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோரிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 பேரும், உண்மை கண்டறியும் சோதனை நடத்துமாறு நீதிபதியிடம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 பேரும், உண்மை கண்டறியும் சோதனை நடத்துமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பான விசாரணை கதுவாவில் உள்ள நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 8 நபர்களில் 7 பேர், மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி சஞ்சீவ் குப்தா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி சஞ்சய் குப்தா, குற்றப்பத்திரிகையின் நகல்களை அவர்கள் தரப்புக்கு வழங்குமாறு மாநில காவல்துறை குற்றப்பிரிவுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இவ்வழக்கில் 8-ஆவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறார், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தலைமை நீதித்துறை நீதிபதி முன்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கதுவா மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி காணாமல் போனார். ஒரு வாரம் கடந்த நிலையில், அவர் வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அவரை சிலர் அருகில் இருந்த கோயில் ஒன்றில் அடைத்துவைத்ததும், அங்கு அரை மயக்க நிலையில் வைத்திருந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்ததாகவும் போலீஸார் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, காவல்துறையினர் மூவர் உள்பட 8 பேரை கைது செய்துள்ளது. சம்பவம் தொடர்பாக குற்றப் பிரிவு காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், 'நாடோடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்றும் நோக்கத்துடனேயே இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சிறார் மீது தனியே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை விசாரணை முடிந்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வழக்கில் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறை சிறப்பு அதிகாரி தீபக் கஜுரியா காவல்துறை வாகனத்தில் இருந்தபோது, வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும், சிபிஐ விசாரணை நடத்தவும் கோருவதாக தெரிவித்தார்.
முன்னதாக, வழக்கு விசாரணை தொடங்கிய சிறிது நேரத்தில், வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சஞ்சி ராமின் மகள் மது சர்மா, வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சஞ்சி ராம் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர், காவல்துறை அதிகாரிகள் தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா, நண்பர் பர்வேஷ் குமார் (எ) மன்னு, தனது உறவினரான அந்தச் சிறார், மகன் விஷால் ஜங்கோத்ரா ஆகியோருடன் இணைந்து இச்செயலில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தின் தடயங்களை அழிக்க காவல்துறை துணை ஆய்வாளர் ஆனந்த தத்தா, தலைமைக் காவலர் திலக் ராஜ் ஆகியோர் சஞ்சி ராமிடம் இருந்து ரூ.4 லட்சம் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. 
முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவந்தபோது வழக்குரைஞர்கள் சிலர் அவர்களை தடுத்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை விசாரணையின்போது நீதிமன்ற வளாகத்தில் முன்னெச்சரிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com