சிபிஎஸ்இ பொருளியல் பாட மறுதேர்வு தேதியை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொருளியல் பாட மறுதேர்வு தேதியை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொருளியல் பாட மறுதேர்வு தேதியை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
பொருளியல் பாட வினாத்தாள் வெளியானதை அடுத்து, வரும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு மறுதேர்வு நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்துள்ளது. 
இந்த தேர்வு தேதியை மாற்றக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்று பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளது. 
அந்த மனுவில், சிபிஎஸ்இ பொருளியல் பாட மறுதேர்வு தேதியை மாற்ற வேண்டும் அல்லது மறுதேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேதியையொட்டி, பொறியியல் மற்றும் தேசிய ராணுவ அகாதெமிக்கு நுழைவுத் தேர்வுகள் நடைபெறவுள்ளதால், மறுதேர்வினை வேறு தேதியில் நடத்துமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை பொறுப்பு நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
ஒரு பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டுமா? வேண்டாமா? என்பதை சிபிஎஸ்இதான் முடிவு செய்கிறது. இதில், நீதிமன்றத்தின் தலையீடு எதுவுமில்லை. மறுதேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேதியில், நுழைவுத்தேர்வுகள் குறுக்கிடுவதாகக் கூறுகிறீர்கள். மீண்டும் ஒரு முறை தேதியை மாற்றினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு சிலர் முறையிடுவார்கள். முடிவே இல்லாமல் பிரச்னை தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
முன்னதாக, சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமித் பன்சால், ''அனைத்து சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்த பிறகே, பொருளியல் பாட மறுதேர்வினை, ஏப்ரல் 25-ஆம் தேதி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும், 10-ஆம் வகுப்பு பயிலும் 16 லட்சம் மாணவ, மாணவிகளை மீண்டும் தேர்வு எழுதவைப்பது சிரமமான விஷயம் என்பதால், கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் முடிவு கைவிடப்பட்டது'' என்றார்.
அதைத் தொடர்ந்து, 10-ஆம் வகுப்புக்கு மறுதேர்வு நடத்த வேண்டாம் என்று சிபிஎஸ்இ முடிவு எடுத்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com