நக்ஸல் பகுதிகளில் 4,000 செல்லிடப்பேசி கோபுரங்கள்: மத்திய அரசு திட்டம்

நக்ஸல் பாதிப்புக்குள்ளான 10 மாநிலங்களில் 4,072 செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை

நக்ஸல் பாதிப்புக்குள்ளான 10 மாநிலங்களில் 4,072 செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை விரைவில் வழங்கும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
புதிய செல்லிடப்பேசி கோபுரங்கள் மூலம், சம்பந்தப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையை அதிகரிக்க இயலும் என்றும், பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.3,167 கோடி செலவில் 2,329 செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்தச் சூழலில், நக்ஸல் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில் தொலைத் தொடர்பு சேவைகளை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, 4,072 செல்லிடப்பேசி கோபுரங்களை புதிதாக அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கான ஒப்புதலை முதல்கட்டமாக தொலைத்தொடர்பு ஆணையம் வழங்கியுள்ளது.
தற்போது அது மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு அத்திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் ஜார்க்கண்டில் 1,054 கோபுரங்களும், சத்தீஸ்கரில் 1,028 கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளன. அதைத் தவிர ஒடிஸா, ஆந்திரம், பிகார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான மொத்த செலவினம் எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அவற்றை உலகளாவிய சேவைசார் நிதியுதவி அமைப்பு (யுஎஸ்ஓஎஃப்) ஏற்றுக் கொள்ளும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்புப் படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்தி, அதன் வாயிலாக நக்ஸல் செயல்பாடுகளை ஒடுக்க முடியும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com