வரவு-செலவுக் கணக்கை அளிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து லாலு கட்சிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

கட்சியின் வரவு-செலவுக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் வரவு-செலவுக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்பு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தங்கள் கணக்குத் தணிக்கை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் நிதிச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 2014-15-ஆம் ஆண்டுக்கான கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அக்கட்சியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
அதில், 'இந்த நோட்டீஸ் கிடைத்த 20 நாள்களில் உங்கள் கட்சியின் கணக்குத் தணிக்கை அறிக்கையையும், இதுவரை கணக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என்ற விளக்கத்தையும் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்டமாக தேர்தல் நடத்தை விதிகளின்படி உங்கள் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 49 அங்கீகரிக்கப்பட்ட பிராந்தியக் கட்சிகளும், பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 7 அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளும் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com